2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாவலப்பிட்டி போஹில், பாராண்டா தோட்டத் தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டி போஹில் மற்றும் பாராண்டா ஆகிய தோட்டங்களில் 110 ஏக்கர் நிலப்பகுதியை ஜனவசம நிறுவனத்தினர் வெளியாருக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 4ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த  பணிநிறுத்தப் போராட்டம்  இன்று புதன்கிழமை  முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

மேற்படி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அலுத்கமகே இன்று புதன்கிழமை   மேற்படி  தோட்டங்களுக்கு விஜயம் செய்து தோட்ட அதிகாரியுடனும் தொழிலாளர்களிடமும்  கலந்துரையாடியதைத் தொடர்ந்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

போஹில் மற்றும் பாராண்டா ஆகிய தோட்டங்களில் 300 தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 420 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தத் தோட்டங்களின் 110 ஏக்கர் நிலப்பகுதியில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளன. இந்த நிலப்பகுதியை ஜனவசம நிர்வாகத்தினர்; தோட்டத் தொழிலாளர்ளுக்கு உரியமுறையில் அறிவிக்காமல் வெளியாருக்கு வழங்கியதாகவும்  பாதிக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.  

இந்த நிலையில், கடந்த 8 வருடங்களுக்கு மேல் மேற்படி தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சேவைக்காலப் பணம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன தோட்ட நிர்வாகங்களினால் வழங்கப்படவில்லையெனவும்  இவ்வாறானதொரு நிலையில் தோட்ட நிர்வாகம்  கைமாறுவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாதெனவும் எமது தோட்டத்தை எந்தவிதத்திலும் வெளியாருக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லையெனவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸில் அங்கத்துவம் வகிப்பதால் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அலுத்கமகே இன்றையதினம்  குறிப்பிட்ட தோட்டங்களுக்கு விஜயம் செய்து தோட்ட அதிகாரியுடனும் தொழிலாளர்களிடமும்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் குறிப்பிட்டத் தோட்டங்களின் விளைநிலங்களை எக்காரணம் கொண்டும் வெளியாருக்கு வழங்க முடியாது. இவ்விடயம் தொடர்பாக நான் ஜனவசம தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக  மஹிந்தானந்த அலுத்கமகே தொழிலாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, தோட்ட நிர்வாகம் இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாதுள்ள   கொடுப்பனவுகள் குறித்து நாவலப்பிட்டி தொழில்த்திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .