2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்டப் பாதை திறப்பு விழா

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)


கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  கொங்கிறீட்  பாதையின் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கு அமைய துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் சுமார் பத்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில்
இந்தப் பாதை செப்பனிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனைப் பிரதேச அமைப்பாளர் லெட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் கலந்துகொண்டார். அத்துடன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம்,

'தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதில் பின் நிற்கின்ற பெருந்தோட்ட நிறுவனங்கள், தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற வேதனத்தை வழங்காதிருப்பதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

பெருந்தோட்டங்களை பெருந்தோட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்பதற்கு முன்பு தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தோட்ட நிர்வாகங்களே ஏற்படுத்தி வந்தன. ஆனால் தற்போது தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சேம நலத்தில் அக்கறை செலுத்தாத பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு எற்ற ஊதியத்தை வழங்காது தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றன.

தோட்டப்பகுதிகளில் பாதை அபிவிருத்தி, குடிநீர் விநியோகம் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் அரசியல் பிரதிநிதிகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக ஜனாதிபதிக்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொடுக்காத தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதில் சில தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிலாளர்களுக்குத் துரோகமிழைத்து வருகின்றன.  இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால்  ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கம், தொழிற்சங்க ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராகும். இதன் ஒரு கட்டமாக தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றினையும் ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த நிலையில் வரவு - செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தோட்டப்பகுதி மக்களையும் உள்ளடக்கியதாக அமுல்படுத்தப்பட வேண்டும். வறிய மாணவர்களுக்காக வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிவாரணத்திட்டத்தில் தோட்டப்பகுதி மாணவர்களும் பாரபட்சமின்றி உள்வாங்கப்பட வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன். தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை அந்தந்தத் தோட்டங்களிலுள்ள இளைஞர் சமூகத்திற்குப் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதன் மூலமாக கடந்த 2 வருடக்காலத்துக்குள் 10 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் தோட்டப்பகுதிகளில் மேற்கொண்டுள்ளேன்.

எனக்கு வாக்களித்த மக்களுக்கு உரிய முறையில் இவ்வாறு சேவையாற்றுவதன் காரணமாகத்தான் என்னிடத்திலும் எனது அமைப்பினடத்திலும் தோட்டப்பகுதி மக்கள் என்றும் விசுவாசமுள்ளவர்களாக உள்ளனர். இந்த விசுவாசத்துக்கு ஏற்ப எனது மக்களின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .