2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டு ஒப்பந்தத்துக்காக ’இணைந்து செயற்படத் தயார்’

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்​படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமெனக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் கோரியிருப்பதைத் தொழிலாளர் தேசிய சங்கமும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வ​ரவேற்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் பழனி திகாம்பரம், ஆனால், மலையக மக்களை வஞ்சிக்கும் கூட்டு ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு அவர்களது சம்பள அதிகரிப்புக்கான புதிய முறை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் 15ஆ​ம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தை புதுப்பித்து சம்பள அதிகரிப்புச் செய்வதற்கான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நேற்று முன்தினம் (09) தோல்வியிலேயே முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் தமிழ்மிரருக்குக் கருத்துரைத்த, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், தலவாக்கலையில் இடம்பெற்ற மாபெரும் போராட்டம், கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கு எதிரானதல்ல எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை முன்வராத, பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிரானது எனத் தெரிவித்த அவர், அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொடுப்பதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை பெருந்தோட்டக் கம்பனிகள் வழங்க முடியும் எனவும், அதற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுப்பதற்கு கட்சி பேதமின்றி எவருடனும் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், நான் ஓர் அமைச்சராக இருக்கின்ற போதிலும், கூட்டு ஒப்பந்தத்தில் என்னால் கையெழுத்திட முடியாது எனத் தெரிவித்த அவர், பெருந்தோட்டத் துறையின் வீழ்ச்சிக்குக் காரணமான இந்தக் கூட்டு ஒப்பந்தம், தடை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .