2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க முடியாது: ரணிலிடம் மனோ கணேசன் தெரிவிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான ஜனநாயக மக்கள் முன்னணியின்; ஆதரவை நிபந்தனையில்லாமல் வழங்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.  

"கடந்த பத்து வருடங்களாக கொழும்பு மாநகர சபையிலும், மேல் மாகாண சபையிலும், நாடாளுமன்றத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் வழங்கியதைப் போன்ற நிபந்தனையற்ற ஆதரவை இனிமேலும் தொடர முடியாது. தலைநகர தமிழ் மக்கள் தங்களது நலனை முன்னிறுத்தும் பேரம் பேசும் சக்தியை எங்களுக்குத் தந்துள்ளார்கள். இதுவே, கொழும்பு மாநகரத்திலும், தெஹிவளை - கல்கிஸையிலும், கொலொன்னாவையிலும் தமிழ் மக்கள் எங்களுக்கு தந்துள்ள ஆணையாகும். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என ரணில் விக்கிரமசிங்கவிடம் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஆளுங்கட்சி 16 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜே.வி.பியின் ஒரு ஆசனத்தை தவிர்த்து, முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள் உட்பட அரசு ஆதரவு அணிகள் 6 ஆசனங்களைப் பெற்றுள்ளன. எனவே அரசாங்கம் 22 ஆசனங்களை தன்வசம் கொண்டுள்ளது. மாநகர சபையில் 53 உறுப்பினர்களில் பெரும்பான்மை பலமான 27 ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் 6 ஆசனங்கள் எந்த கட்சிக்கும் தேவைப்படுகின்றன. அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற முறையில் ஐதேக நிர்வாகத்தை ஏற்படுத்தினாலும், மாநகரசபையை சீராக கொண்டு செல்வதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படுகின்றது.
இச்சூழ்நிலையில்; ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, ஜயலத் ஜயவர்தன ஆகியோர் இன்று திங்கட்கிழமை மாலை மனோ கணேசனுடன் கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடலின் பின்னர் மனோ கணேசன்  கூறுகையில்,

"நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்த கருத்துகளை இன்றும், நாளையும் நடைபெறவுள்ள கட்சியின் தலைமைக்குழுக் கூட்டத்தில் நாம் விரிவாக ஆராய்வோம். அவசியப்படுமனால் எமது கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் மேலதிக பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்துவார்கள். மக்கள் எமக்கு தந்துள்ள ஆணைக்கு இசைவாக உரிய முடிவுகளை எமது கட்சி எடுக்கும். ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்து எங்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய மக்களுக்கு எங்களது நடவடிக்கைகள் மூலமாகவே நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • siraj Tuesday, 11 October 2011 04:51 AM

    நல்ல விசயம் மனோ அப்படியே செய்யுங்க.

    Reply : 0       0

    scorpion Tuesday, 11 October 2011 06:10 AM

    கொலம்போ நகர தமிழ் மக்களின் உரிமைக்கு பிரதி முதல்வர் பதவியை கேளுங்க மனோ ..

    Reply : 0       0

    winter Tuesday, 11 October 2011 03:35 PM

    பலே பாண்டியா..

    Reply : 0       0

    aj Wednesday, 12 October 2011 05:22 AM

    Congrats mano anna. One of the best leader forever. we tamils alws backs. do best of colombo ple.

    Reply : 0       0

    asker Wednesday, 12 October 2011 05:21 PM

    தம்பி பாய்ந்தது போல் நீங்களும் பாயாமல் இருந்தால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .