2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை: ’பரிந்துரைகளை மீளாய்வு செய்யவும்’

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், கிளிநொச்சி மாவட்டப் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அக்குழுவினால், முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல விடயங்கள், நிர்வாகத் துறையின் நடைமுறைகளோடு தொடர்புபட்டவை என்பதை புலப்படுத்துகின்றது. வடமாகாண சபையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்ற போதிலும், புறச்சூழல் விசாரணையாளர்களால் மாகாணசபை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது கருத்தில் எடுக்கப்பட வேண்டியதாகிறது.
குறிப்பாக கடந்த ஆட்சிக் காலத்தில், அரசியல் நிர்வாக முறைகேடுகளால் சீர்கெட்டிருந்த வடக்கு மாகாணத்தைச் சுத்தப்படுத்துகின்ற கடமை, அமைச்சர்களுக்கு இருந்தது என்பதையும் அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது என்பதை தாங்கள் உணர்வீர்கள் என நம்புகின்றோம்.
இன்றைய சூழலில், வடக்கு மாகாண சபையைப் பலவீனப்படுத்துதல், பலவீனப்படுத்தவதற்கு முயற்சித்தல் என்பவை, தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளை பலவீனமாக்கும் என்பதுடன், அது நோக்கிய தமிழ் தேசிய இனத்தின் ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடும் என்பது தொடர்பில்,  தாங்கள் ஆராய வேண்டும்.
மேலெழுந்தவாரியாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையை ஏற்று அங்கிகரிக்க முனைந்தால், வடமாகாண அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புத் தத்துவம் கேள்விக்குள்ளாக்கப்படும் எனபதுடன், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையே பதவிவிலகுவது ஜனநாயகத்தை மகிமைப்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
வடமாகாண சபையின் ஆட்சிக்காலம், இன்னமும் 15 மாதங்களில் நிறைவுபெற இருப்பதனால், தங்களின் தலைமையின் கீழான முதலாவது அமைச்சரவையை பலவீனப்படுத்துவதன் மூலம், எங்கள் எல்லோரது மதிப்பையும் பெற்றுள்ள தங்களின் தலைமைத்துவம் கேள்விக்குறியதாகிவிடக் கூடாது.
விசேடமாக, குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சட்டரீதியானதும் தார்மீக ரீதியிலானதுமான சான்றுகளை முன்வைக்க, குறித்த அமைச்சர்கள் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தப்படுகின்றது. எனவே, அவர்கள் தன்னிலை விளக்கமளிக்க இடமளிப்பதோடு, குற்றச்சாட்டுகள் தொடர்பான பதில்களை விசாலமாகப் பரிசீலிக்கவும் மேன்முறையீட்டு உயர் குழுவொன்றை நிறுவி மயக்கமற்ற உண்மைகளை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்விடயத்தில், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளுக்கும் ஒற்றுமைக்கும் பங்கமற்ற தீர்மானம் ஒன்றை தாங்கள் எடுக்க வேண்டும் என்று, பணிவுடன் வேண்டுகின்றோம்.' என, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .