2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். குடா நாட்டில் மீளக்குடியேறிய முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படல் வேண்டும்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

சுயமாக மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதுடன் மக்களிடையே நிலவும் காணிப் பிரச்சினைகள், தொழில் சார்ந்த பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென யாழ். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 20ஆவது வருட நிறைவையிட்டு  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். மண்ணின் நாலா திசைகளிலும் எமது உடன் பிறப்புக்களாகிய இந்துக்களுடனும், கிறிஸ்தவர்களுடனும், பௌத்தர்களுடனும் பன்னெடுங்காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வந்தோம். இன்றும் இனியும் வாழ்வோம்.

இந்த மண்ணையும் இந்த மண்ணின் மக்களையும் நேசிக்கும் நாம், இந்த மண்ணின் மொழியையும் வரலாற்றையும் உணர்வுகளையும் உரிமைகளையும் துன்பத்தையும் இன்பத்தையும் அழிவையும் அபிவிருத்தியையும் எமது வாழ்வோடு பகிர்ந்து கொண்டோம். இன்றும் நாளையும் பகிர்ந்துகொள்வோம்.

இந்த மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் இருக்கும் வேதனை மிகுந்த வடுக்கள், இழப்புகள், மன உழைச்சல்கள் எமக்கும் சொந்தமானவையே. நாம் அனைவரும் போரினாலும் அது தோற்றுவித்த பாதக விளைவுகளாலும் பாதிக்கப்பட்டவர்களே.

1990 ஒக்டோபரில் ஒரு திட்டமிட்ட பலவந்த வெளியேற்றம் எமது  சமூகத்தின் அவல நிலைக்கு வழிகோலியமை மறக்க முடியாத நிகழ்வாகும். அது எமது சமூகத்தின் சொல்லொணாத் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் வழிகோலியது. இத்தகைய பலவந்த வெளியேற்றத்துடன் யாழ். மண்ணில் அமைதியையும் சமாதானத்தையும் நேசிக்கும் யாழ். மண்ணின் எந்தவொரு மைந்தனும் உடன்பாடு கொண்டிருக்கமாட்டான் என்பது எமக்கு ஆறுதல் தரும் விடயமே.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் துளிர்ப்பதற்காய் எமது தாய் மண்ணில் வேர் பதிக்கின்றோம். ஒன்றாய், ஒற்றுமையாய் நாமும் துளிர்க்கும் இவ்வேளையில் எம்மை இப்பூமியில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மேற்கொண்ட முயற்சியை நினைவு கூறுகின்றோம். யாழ். முஸ்லிம்களும் யுத்தம் என்ற கொடிய அரக்கனால் பாதிப்படைந்தவர்கள்  என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், அரச கொள்கைகளும் அரச திட்டங்களும் முன்வைக்கப்படுதல் உறுதி செய்யப்பட வேண்டும் எனக்கோருகின்றோம்.

இன நல்லிணக்கமும் அமைதியும் இந்த மண்ணில் நிலவ நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் கூறுகின்றோம். எமது வேண்டுகோள்களாக, அரச நிர்வாகப் பிரதிநிதிகளையும் சமூகப் பிரதிநிதிகளையும் இணைத்து ஒரு செயற்குழு அரச அதிபரின் அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டு, அதனூடாக யாழ். மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான திட்ட அறிக்கை சமர்ப்பித்து அதனை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .