2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நெடுந்தீவு அலுவலகம் அகற்றப்படுவது திடீர் நடவடிக்கை அல்ல: ஈ.பி.டி.பி

Super User   / 2013 டிசெம்பர் 08 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவிலுள்ள ஈ.பி.டி.பியின் அலுவலகம் நீக்கப்பட்டமை திடீர் நடவடிக்கை அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது.

அத்துடன் யாழ். குடாநாட்டிலுள்ள பல அலுவலகங்களை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்;டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது திடீர் நடவடிக்கையாகவோ, அவசரப்பட்ட நடவடிக்கையாகவோ நாம் முன்னெடுக்கவில்லை எனவும் ஈ.பி.டி.பியின்  ஊடக பேச்சாளர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் அண்மையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளரின் மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நெடுந்தீவிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகம் கடந்த வாரம் அக்கட்சியின் தலைமை பீடத்தினால் மூடப்பட்டது.  இது தொடர்பாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சி.தவராசாவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"எமது ஆய்வுகளும் ஆதரவாளர்களின் அபிப்பிராயங்களின் மூலம் நீண்ட காலமாக எமது அலுவலகங்களை ஒழுங்கமைப்பது மற்றும் கட்சியின் கட்டமைப்பை மீள்ஒழுங்கு செய்தல் தொடர்பாக பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இடையில் தேர்தல்கள் வந்ததாலும் குறிப்பிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த அரசியல் செயற்பாடுகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவை இருந்ததாலும் எமது சீரமைப்பு செயற்பாடுகள் காலதாமதமடைந்திருந்தன.

தற்போது மாறியிருக்கும் அரசியல் சூழலையும் நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட கட்சியின் செயற்பாடுகளின் மறுசீரமைப்புக்கான தேவையையும் கவனத்தில் கொண்டு அலுவலகங்களை ஒழுங்கு செய்வதையும் உள்ளக நிர்வாக கட்டமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்வதையும் கட்சி செயற்படுத்தும்.

அதன் ஒரு நடவடிக்கையாகவே நெடுந்தீவு அலுவலகம் மூடப்பட்டதும் தீவகத்திலுள்ள சில அலுவலகங்களை அகற்றிக் கொள்ளுவதுமாகும்.எமது கட்சியின் திட்டங்களும் நடவடிக்கைகளும் எமது மக்களுக்கான நலன்களில் இருந்தும் எமது அரசியல் கொள்கைளுக்கு வலுச் சேர்க்கும் விதமாகவுமே இருக்கும்.  எமது நிலைப்பாட்டை ஆதரவாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று எமது கட்சி நம்புகின்றது" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .