2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இதயசுத்தியை அரசிடம் எதிர்பார்க்கவே முடியாது

Super User   / 2014 மார்ச் 23 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்


அரசியல் தீர்வையும், மனிதாபிமான அடிப்படையிலான அபிவிருத்தியையும் நடைமுறைப்படுத்தும் இதயசுத்தியை மகிந்த அரசிடம் எதிர்பார்க்கவே முடியாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் 'வள்ளுவர்' முன்பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் சனிக்கிழமை (22) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர் முடிவடைந்து கடந்த ஐந்து வருடங்கலாக, 'இனப்பிரச்சனைக்கு தமிழர் தரப்பால் ஏற்றுக்கொள்ளக்கூடிய காத்திரமான அரசியல் தீர்வு, தமிழர் பகுதிகளில் மனிதாபிமான அடிப்படையிலான அபிவிருத்தி பணிகள்'  இவ்விரண்டையும் நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமுகமும், தமிழ் தேசியக்கூட்டமைப்பும், தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தியும், எமது வலியுறுத்தல்களை, அழுத்தமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தியதால், எங்கெல்லாம் சென்றால் எமக்கு நீதி கிடைக்குமோ, அங்கெல்லாம் செல்ல வேண்டிய நிலையில் தமிழர்கள் நாங்கள் உள்ளோம்.

இந்த உத்தியின் ஒரு அங்கமாகவே ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா கூட்டத்தொடரை நாங்கள் கையாளுகின்றோம். மனித உரிமைகளையும், மனித மாண்பு விழுமியங்களையும் மதிக்கின்ற, அது தொடர்பில் கவனிப்புடன் செயலாற்றுகின்ற, அக்கறை கொள்ளுகின்ற உலக கனவான்கள் கூடுகின்ற ஒரு பொது இடத்தில், கருத்துச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், ஊடக சுதந்திரம், தகவல் அறியும் சுதந்திரம் உள்ளிட்ட தனி மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் நிலை பற்றியும், மனித உரிமைகளை பேணல், பாதுகாத்தல் என்பன தொடர்பில் எவ்வித முன்னேற்றங்களையும், நல்லெண்ண சமிஞ்ஞைகளையும் வெளிப்படுத்தாத அரசு பற்றியும், சுட்டிக்காட்டுவது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என நாம் பெரிதும் நம்புகின்றோம்.

போர் முடிவுக்கு பின்னர் இரண்டு முக்கிய பெரும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசுக்கு இருந்தது. ஒன்று: நிரந்தர அரசியல் தீர்வு, மற்றொன்று: போரால் பாதிக்கப்பட்டோருக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கல். இவ்விரண்டு பொறுப்புகளிலிருந்தும் வழுவி, கால இழுத்தடிப்புகளையும், இன்றும் கூட தப்புக்கு மேல் தப்புகளையும் செய்து கொண்டிருக்கும் இந்த அரசிடம், இனியும் விமோசனத்தை எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் சர்வதேச தலையீடுகளை கோருகின்றோம். சர்வதேச சமுகத்தின் ஒத்துழைப்போடு எமக்கு காத்திரமான நீதி கிடைக்கும் என்பதில் நீங்கள் எல்லோரும் என்றும் போலவே தளராத நம்பிக்கையோடு இருங்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி, அதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை, மின்சார வசதிகள், வீட்டுக்குடிமனை வசதிகள், தொழில் வாய்ப்புகள் இல்லாமை, என்று பல்வேறு அடிப்படை பிரச்சினைகளோடும், மனித உயிர் வாழ்தலுக்கு தேவையான அத்தியாவசிய வளங்கள் குறைபாடுகளோடும் மன்னகுளம், குஞ்சுகுளம், கொல்லர்புளியங்குளம், பெரியகுளம் கிராம மக்கள் நீங்கள் வாழ்வதை காணுகின்றோம்.

உங்கள் இடர்களை களைந்து, வாழ்க்கைத்தரத்தில் மேம்பாடுகளை காணச்செய்ய நாமும் புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. புலத்திலிருந்து கிடைக்கின்ற உதவிகள் போதாது என்ற போதிலும், அவர்கள் உங்கள் வாழ்க்கைத்தரம் தொடர்பில் மிகவும் கரிசனையோடு இருக்கிறார்கள். இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட மனிதகுலப்படுகொலைகளுக்கு நீதி கேட்டு நடை பயணம் செய்து கொண்டும், மறுபுறம் தம் உழைப்பின் ஒரு பகுதியை இவ்வாறாக தந்துதவியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதாரதுறை அமைச்சர் ப. சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் வைத்தியகலாநிதி சி.சிவமோகன், ஆர். இந்திரராசா, எம். தியாகராஜா, ஜி.ரி. லிங்கநாதன், நெடுங்கேணி பிரதேச செயலர் க. பரந்தாமன் உட்பட மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .