2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி கைத்தொழிற்துறை முன்னேற்றம் கண்டு வருகின்றது: டக்ளஸ்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


'யுத்தத்தால் அழிவடைந்த கிளிநொச்சி மாவட்டம் அரசின் கொள்கை திட்டத்திற்கு ஏற்ப பல்வேறு அபிவிருத்திகளுடன் முன்னேற்றம் கண்டு வருகின்றது' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 
வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சிதிட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார தொழில் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
 
'பனைசார்ந்த தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்து மேம்படுத்தும் வகையில் 98 பேரும், கைத்தொழில் அபிவிருத்தி சபை சார்ந்த பயிற்சிகளை 33 பேரும் பெற்றிருந்த நிலையில், இவர்களுக்கான தொழிற்துறைசார்ந்த சார்ந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
 
இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி குறித்த தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்து மேம்படுத்தப்பட வேண்டும். அத்துடன், உற்பத்திகள் தரமானதாகவும் நவீனமாகவும் கவர்ச்சி மிக்கதாகவும் அமையும் வகையில் செய்யப்படுதல் வேண்டும்.
 
பனைசார்ந்த உற்பத்திகளை  நவீனப்படுத்தும் வகையில் எமது அமைச்சின் மற்றுமொரு நிறுவனமான தேசிய வடிவமைப்புச் சபையூடாக துறைசார்ந்தவர்கள் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
 
யுத்தத்தால் அழிவடைந்த இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்து மேம்படுத்தும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளை தொழில் முயற்சியாளர்களுக்கு ஊடாக ஊக்கப்படுத்தி  வளர்த்தெடுப்பதன் ஊடாகவே அது சாத்தியமாகும்.
 
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக பயிற்சிகளை நிறைவு செய்த குடிசைக் கைத்தொழிலாளர்களுக்கு தொழிற்துறைசார்ந்த உபகரணங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட ஏனைய அதிதிகளும் வழங்கி வைத்தனர்.
 
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்கள் அமைச்சின் நோக்கம் செயற்திட்டம் மற்றும் பயனாளிகள் அடையப் பெறக் கூடிய பயன்கள் தொடர்பாக விளக்கவுரையாற்றினார்.
 
தொடர்ந்து உரையாற்றிய ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,

'பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மேலுமொரு வாழ்வாதார திட்டம் வழங்கப்படுகின்றது. இதேவேளை இம்மாவட்டத்திலே வாழ்வின் எமுச்சித்திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது.

மீள்குடியேற்றத்திற்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவை மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டில் கணிசமான பங்காற்றியிருக்கின்றன. அதனூடாக மக்களின் வாழ்வியலும் மேம்பட்டுள்ளது.

முற்றாக அழிந்துபோன இந்த பிரதேசங்களில் மிகக்குறுகிய காலத்திற்குள் பல்வேறு செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.  இவற்றுக்கூடாகவே மீள்குடியேறிய பிரதேசங்களில் மிகப்பெரும் மாற்றங்களை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம் இம்மாற்றங்கள் வியக்கத்தக்கனவாக உள்ளன.

அதாவது ஏராளமான இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு சுய தொழிலை நம்பி வாழ்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகள் பல நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன, இருப்பினும் எமது மக்கள் இன்னமும் தேவைகள் நிறைந்த சமூகமாகவே காணப்படுகின்றனர். 

வாழ்வின் எழுச்சித்திட்டமானது மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டினை இலக்காகக்கொண்டு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு செயற்திட்டம்.

வாழ்வின் எழுச்சி திட்டமானது மக்களின் விருப்புக்களுக்கமைவாக உதவிகளை வழங்கிவருகின்றது. எனினும் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் வெற்றியானது கடினமான உழைப்பின் பின்னணியிலேயே தங்கியுள்ளது.

கடந்த காலங்களில் செயற்படுத்திய பல வாழ்வாதார திட்டங்கள்  கடினமான உழைப்பு இன்மையால் தோல்வியடைந்தன.

தொடர்ந்தும் வருடாவருடம் இவ்வாறான உதவிகள் கிடைக்கப்பெறும்; என்பது சாத்தியமற்றது. எனவே கிடைக்கப்பெறும் காலத்தில் அவற்றை சரியாகப்பயன்படுத்தி முன்னேற்றத்திற்காக மக்கள் உழைக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், அமைச்சின் திட்டப் பணிப்பாளர் கமகே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .