2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பண்டிகைக்காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தாதீர்கள்

Super User   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுமக்கள் பண்டிகைக்காலத்தில் மதுபானம் உபயோகித்து விட்டு வாகனம் செலுத்துதல் மற்றும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் ஈடுபடவேண்டாம் என சாவகச்சேரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் டபிள்யு.எம்.எஸ்.தென்னக்கோன் இன்று வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.

சாவகச்சேரி பொலிஸ் ஆலோசனைக்குழு, ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸாரிற்கிடையிலான கலந்துரையாடலிலேயே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இடம்பெறறது இதன்போதே தென்னக்கோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

'கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய விபத்துக்கள் 84 இடம்பெற்றதுடன், அதில் 15 பாரதூரமான விபத்துக்களாகவும் இருந்தன.

அதனைவிட மேலதிகமாக மதுபோதையில் கைகலப்பில் ஈடுபட்ட 124 சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அவற்றில் 8 பேர் படுகாயங்களுக்குள்ளாகியும் இருந்தனர். எனவே மது அருந்துபவர்கள் வீதிகளில் பயணிப்பதையும், கைகலப்பில் ஈடுபடுவதினையும் இந்த பண்டிகைக் காலத்தில் கைவிடவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், விளையாட்டு நிகழ்வுகளின் போது கடந்த வருடம் ஏற்பட்ட கைகலப்பில் 4 வீரர்களும் 28 பார்வையாளர்களும் காயமடைந்துள்ளனர். ஆகவே விளையாட்டு நிகழ்வுகளை நடத்துபவர்களும் அதில் பங்குபற்றுபவர்களும் நட்பு ரீதியாக அதனை பார்க்க வேண்டும்' என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், விளையாட்டு நிகழ்வுகளில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளை வைப்பதன் மூலம் முரண்பாடுகளைக் குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய ஆலோசனைக்குழுத் தலைவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருமான ந.குகுதாஸன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .