2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டமை மிகப்பெரிய வெற்றி’

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

 “மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஆகியன ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது, மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டமை மிகப்பெரிய வெற்றி. அந்தவகையில், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சில உதவித்திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளதாக” தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் இன்று (17) தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கில் 683 ஏக்கர் காணி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டிருந்தது.

இப்பகுதிகளை இன்று (17) நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன்,

“இந்தப் பகுதி விடுவிப்பு, காணி விடுவிப்பின் மிக முக்கியமான கட்டமாக கருதுகின்றோம். இதிலும் சில பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. சில வீதிகளில் இராணுவ முகாம்கள் காணப்படுகின்ற காரணத்தினால், சில அசௌகரியங்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

அந்த அசௌகரியங்களையும் நிவர்த்தி செய்வதுக்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம். மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம். இந்த ஆட்சியிலும் கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

28 வருடங்கள் மக்கள் வாழாத பிரதேசம் என்ற காரணத்தினால், இந்தப்பகுதிகளில் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்ததுக்கான நிதிகளை உடனடியாக கொடுக்க வேண்டும்.

அதேநேரம் அரசியல் கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்.

காணி விடுவிப்புத் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இந்த காணி விடுவிப்புக்கு ஒரு காரணியாக இருக்கின்றது.

6 ஆயிரத்து 348 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதுக்கு மறுப்பு தெரிவித்து, இராணுவ நடவடிக்கைகளுக்காக சுவீகரிப்பு செய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுத்ததுடன், சுவீகரிப்பதுக்கான அறிவித்தல்களையும் ஒட்டியிருந்தார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதுக்கான செயலணி ஒன்று நிறுவப்படவுள்ளது. அந்த செயலணியினை வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் நிர்வகிப்பார். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளுக்கு அப்பால், தேவைப்படும் ஏனைய உதவிகளை எமது உறவுகளிடம் இருந்து பெற்று மீள்குடியேறிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேநேரம், ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .