2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


கடந்தவார பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்களை பொறுத்தமட்டில் 2012 ஜூன் மாதத்தின் பின்னர் பதிவாகிய உயர்ந்த புரள்வு பெறுமதியாக 5 பில்லியன் ரூபாவை கடந்து பதிவு செய்திருந்தது. அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து பங்குச் சுட்டெண் 6000 புள்ளிகளை விட அதிகமாகவே தொடர்ச்சியாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதான ஈடுபாடு பெருமளவு சந்தை உயர்ந்த பெறுமதிகளில் பங்களிப்பு செலுத்தியிருந்தன. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,054.55 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3323.10 ஆகவும் பதிவாகியிருந்தன.

மார்ச் 31ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 10,362,394,170 அமைந்திருந்தது. கடந்தவாரம் மொத்தமாக 22,009 பங்கு கொடுக்கல் - வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் - வாங்கல்கள் 20,764 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,245 ஆகவும் பதிவாகியிருந்தன.

திங்கட்கிழமை
அ.ப.வி.சு மறை பெறுமதியை பதிவு செய்திருந்த போதிலும் S&P SL20 நேர் பெறுமதியை பதிவு செய்திருந்தது. ஜனசக்தி இன்சூரன்ஸ், செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி ஆகிய பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டது. அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு காணப்பட்டதுடன், சம்பத் வங்கி மற்றும் சிட்ரஸ் லெய்ஷர் ஆகிய பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு காணப்பட்டது. PC ஹோல்டிங்ஸ், நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் பிரமல் கிளாஸ் சிலோன் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காணப்பட்டது. அலுமெக்ஸ் சிலோன் பங்குகள் வியாபாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியிருந்தது. அறிமுக விலையிலிருந்து 0.20 ரூபா அதிகரித்து 14.20 ரூபாவுக்கு விற்பனையாகியிருந்தது.

செவ்வாய்க்கிழமை
மாதத்தின் முதலாவது கொடுக்கல் வாங்கல்கள் நேர் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகள் மீது உயர்ந்த நிகர பெறுமதி வாய்ந்த நிறுவன சார் ஈடுபாடு காணப்பட்டது. பிரமல் கிளாஸ் சிலோன் மற்றும் முல்லர் அன்ட் பிப்ஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காணப்பட்டது. வங்கி நிதியியல் மற்றும் காப்புறுதி சார்ந்த பங்குகள் மீது ஈடுபாடு அதிகம் காணப்பட்டது. ஷலீமர் பங்குகள் மீது பதிவாகியிருந்த சந்திப்பின் காரணமாக மொத்தப்புரள்வு பெறுமதியில் 34 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது.

புதன்கிழமை
பரந்தளவில் சந்தையில் உயர்வுகள் அவதானிக்கப்பட்ட போதிலும், புக்கிட் தாரா பங்கின் விலை சரிவு காரணமாக ப்ளு சிப்கள் பெறுமதி இழந்திருந்தன. புரள்வு பெறுமதி 1.90 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. சிட்ரஸ் லெய்ஷர், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் மீது மொத்த பங்கு கைமாறல்கள் இடம்பெற்றிருந்தன. கொலம்போ லான்ட் அன்ட் டிவலப்மன்ட் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அதிகம் காணப்பட்டது. சொஃப்ட் லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் பைரஹா ஃபார்ம்ஸ் ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் மொத்தம் 852 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்திருந்தனர். 

வியாழக்கிழமை
இரு சுட்டிகளும் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு பெறுமதி 2.5 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் கொள்வனவில் வெளிநாட்டவர்கள் ஆர்வம் செலுத்தியமை பங்களிப்பு செலுத்தியிருந்தது. புரள்வு பெறுமதியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதான ஈடுபாடு 82 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தது. மேலும், களனி வெலி பிளான்டேஷன்ஸ், எயிட்கன் ஸ்பென்ஸ் ஹொட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகள் மீது நிறுவன சார் ஈடுபாடு காணப்பட்டது. இதேவேளை, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், எக்ஸ்போலங்கா ஹோலடிங்ஸ் மற்றும் பிரமல் கிளாஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.

வெள்ளிக்கிழமை
வாரத்தின் கொடுக்கல் - வாங்கல்கள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 2012 ஜுன் மாதத்தின் பின்னர் உயர்ந்த பெறுமதிகளை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதி 5 பில்லியன் ரூபாவை எய்தியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் இதில் 87 வீதத்தை பதிவு செய்திருந்தன. கொமர்ஷல் வங்கி, லங்கா ஐஓசி மற்றும் பைரஹா ஃபார்ம்ஸ் ஆகிய பங்குகள் மொத்தமாக கைமாறியிருந்தன. ப்ளுடயமன்ட் ஜுவல்லரி பங்குகள் மீது சிறியளவு முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர். குறிப்பாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளை அதிகளவு விற்பனை செய்திருந்தனர்.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஷலீமர், பிம்புத் ஃபினான்ஸ், சொஃப்ட்லொஜிக், மிரமர் மற்றும் ரேடியன்ட் ஜெம்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

சிலோன் லெதர் (உரிமை), பான்சி றிசோர்ட்ஸ், சிலோன் பிரின்டர்ஸ், PC ஹவுஸ் மற்றும் GS ஃபினான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 43,900 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 40,200 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. கடந்த வார பெறுமதியை விட இந்த வாரம் தங்கத்தின் விலை மேலும் சற்று வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.97 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 219.36 ஆக காணப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .