2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் நானாட்டான் மீள்குடியேற்றம் இடைநிறுத்தம்

A.P.Mathan   / 2011 ஜனவரி 10 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் பகுதியில் உள்ள மேட்டு நிலக்காணியில் சட்டவிரோதமான முறையில் இன்று மக்களை மீள்குடியேற்றம் செய்யப்பட இருந்த நிலையில் அப்பிரதேச மக்களின் முயற்சியினால் அங்கு இடம்பெறவிருந்த மீள்குடியேற்றம் நிறுத்தப்பட்டதோடு, அங்கு நடைபெறவிருந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மேட்டுநிலக் காணியில்- இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் பகுதியில் வாழ்ந்துவந்த முஸ்ஸிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
குறித்த இக்காணி அமைந்துள்ள பிரதேசம் 2004ஆம் ஆண்டு நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 500 காணித்துண்டுகள் பொது மக்களுக்கும், 100 காணித்துண்டுகள் அரச அலுவலகங்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இக்காணி தொடர்பாக 18ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2004ஆம் ஆண்டு நானாட்டான் பிரதேசச் செயலகத்தினால் கடிதங்கள் அனுப்பப்பட்டு பின் 30ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2004ஆம் ஆண்டு காணிக்கச்சேரி நடாத்தப்பட்டுள்ளது.

எனினும் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமை காரணமாக இது நடமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையிலேயே குறித்த காணிப்பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை - இடம் பெயர்ந்து புத்தளம் பகுதியில் வாழ்ந்துவந்த முஸ்ஸிம் மக்களில் முதற்கட்டமாக 30 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றதோடு அவர்களில் பலர் குறித்த பகுதிக்கும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவத்தினை கேள்விப்பட்ட நானாட்டான் பிரதேச மக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு மீள்குடியேற்றத்தினை தடுத்து நிறுத்தும் முயற்சியில் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன் கூடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறைகள் அதிகரிக்காதவாறு பார்த்துக்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான பொலிஸார் சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின் நானாட்டான் பிரதேச செயலாளர் ஏ.சந்திரையா சம்பவ இடத்திற்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பயனளிக்கவில்லை.

அதன்பின்னர் உயரதிகாரிகளுடன் பிரதேச செயலாளர் பேசியுள்ளதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு என்பன இடம்பெறமாட்டாது எனவும் தெரிவித்தார்.

ஆனாலும் மக்கள் அவ்விடத்தில் இருந்து செல்லவில்லை. இந்த நிலையில் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் அலுவலர்கள் பயணம் செய்த வாகனம் அவ்வீதியால் வந்தபோது அங்கு கூடிநின்ற மக்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டதோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்;.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பின் பொலிஸாரின் உதவியுடன் வாகனத்தில் வந்தவர்கள் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

நீண்ட நேரத்திற்குப்பின் நானாட்டான் பகுதிக்கு வந்த அமைச்சார் றிஸாட் இற்கும் நானாட்டான் பகுதியைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நானாட்டான் மகாவித்தியாலயத்தில் அவசரக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது அமைச்சர் றிஸாட் பதியுதின் தெரிவிக்கையில்:

குறித்த பகுதியில் இனி மீள்குடியேற்றம் செய்யப்படமாட்டார்கள் எனவும் குறித்த நிகழ்வுகள் உடன் நிறுத்தப்படுவதாகவும், அப்பிரதேசத்தைச் சேர்ந்த காணி இல்லாதவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சார் றிஸாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு உறுதியளித்தார்.

அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து கூடியிருந்த மக்கள் அவ்விடத்தை விட்டுச்சென்றனர்.

அமைச்சருக்கும் கிராம மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மன்னார் பிரதேச ஊடகவியலாளர்கள் அனுமதிக்காமையினால் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .