2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாணவர்களை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதை நாம் கண்டிக்கிறோம்: சந்திரகுமார் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கல்வி சார்ந்த செயற்பாடுகளை அரசியல் நோக்கோடு பார்க்கின்ற நிலைமை மாற்றம்பெற வேண்டும்.  அத்தோடு மாணவ சமுதாயத்தை அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதையும் நாம் வன்மையாக எதிர்க்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஜம்பது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  

நீண்டகால யுத்தம் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையை மிகவும் பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையை மாற்றியமைக்க வேண்டியதும் மீண்டும் எமது சமூகத்தைக் கல்வியியல் ரீதியாக உயர்வான நிலைக்குக் கொண்டு வரவேண்டியதுமான வரலாற்றுப் பொறுப்பு எங்கள் அனைவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

இதனை ஓரிரு அரசியல்வாதிகளால் மட்டும் நிறைவேற்றிவிட முடியாது.  ஒட்டுமொத்த சமூகமும் இதற்காக உழைக்க வேண்டும்.
அத்தோடு கல்வி சார்ந்த செயற்பாடுகளை அரசியல் நோக்கில் பார்க்கின்ற நிலைமையும் மாற்றம் பெற வேண்டும்.  மாணவ சமுதாயத்தை அரசியலில் ஈடுபடுத்தி அவர்களின் எதிர்காலத்தையும் சீர்குலைக்க முனைகின்ற செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவை.

இவர்களை பாதுகாத்து சரியான வழிக்கு அழைத்துச் செல்லவேண்டிய பணியினைத்தான் அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை அழிவுப்பாதைக்குள் இட்டுச் செல்லக்கூடிய வகையில் வழிநடத்தமுனையக் கூடாது.  கொடிய யுத்தத்தின் பிடிக்குள் சிக்கித் தவித்து அதன் கொடூரத்தை நன்குணர்ந்த எம் மாணவர்களும் மீண்டும் அவ்வாறான அழிவுப் பாதைக்குள் தள்ள முனைவோரின் செயற்பாடுகளை நிராகரிக்க வேண்டும்.

இன்று இம்மாவட்டத்தில் கல்வித்துறை வளர்ச்சியடைந்து வருகின்றதென்பதை மாணவர்களின் பல்வேறு வகையான பெறுபேறுகள் எடுத்துக் காட்டுகின்றன.  இவை நாம் மீண்டும் கல்வியின் உச்சத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எம் முன் உருவாக்கியுள்ளது.  மேலும் இம்மாவட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் மேலாக கல்விசார் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு நாம் மிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.  எனவே, இம்மாவட்டத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் சென்றும் அரசியல் பேதங்களிலிருந்து விலகி நின்றும் காலத்தின் தேவையை நிறைவேற்ற ஒன்றிணைய வேண்டும் என்றார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் மு.ரவீந்திரனின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் கல்லூரியில்  புனரமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம்  மற்றும் வகுப்பறைத் தொகுதி திறந்து வைக்கப்பட்டன.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல், மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன்,  கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் கபிரியல் மற்றும் உறுப்பினர்களும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .