2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளம்; 30,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினராலும் பிரதேச செயலகங்களின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் முரசுமோட்டை மகா வித்தியாலயம், பரந்தன் இந்து மகா வித்தியாலயம், பூநகரி ஞானிமம் அ.த.க பாடசாலை, ஸ்கந்தபுரம் இலக்கம் 1 ஆகிய பாடசாலைகளில் தங்கிவைக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காகப் பணித்துள்ளார்.

இதேவேளை கண்டாவளை, ஜெயபுரம், பூநகரி, அக்கராயன் ஆகிய இடங்களுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அக்கராயன்குளம் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி வீதியை மூடிய நிலையில் சுமார் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்கிறது. கண்டாவளை பரந்தன் வீதியில் ஏழு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, வட்டக்கச்சி, கல்மடு, தருமபுரம் வீதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும் பாலானோர் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட முறிகண்டி, றெட்பானா, வற்றாப்பளை, கரைச்சிக்குடியிருப்பு மற்றும் கருமபுள்ளியான் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஆனையிறவு - தட்டுவன்கொட்டிக்கும் பிற இடங்களுக்குமான போக்குவரத்துத் தொடர்புகள் முற்றாகவே துண்டிக்கப்பட்டுள்ளன. தட்டுவன்கொட்டிப் பிரதேசத்துக்கான வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்வதினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இங்கேயுள்ள 90 குடும்பங்களுக்கான போக்குவரத்தை படகின் மூலம் ஏற்பாடு செய்வதற்கு கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் முயற்சியெடுத்துள்ளது. தட்டுவன்கொட்டிக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த மக்கள் மழைநீரையே இப்போது குடிநீருக்குப் பயன்படுத்துகின்றனர்.

முன்னர் இவர்களுக்கான குடிநீர் இயக்கச்சியில் இருந்து நிலத்தடி நீர் விநியோத்தின் மூலம் வழங்கப்பட்டது. பின்னர் நீர்க் கொள்கலன்கள் மூலம் வழங்கப்பட்டது. இப்போது போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளதால் மக்கள் மழைநீரைச் சேமித்தே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .