2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத்தீவுகள்: கொண்டாடப்படவேண்டிய கோலாகலச் சாம்பியன்கள்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூன்று வாரங்கள் இலங்கையின் மூன்று மைதானங்களில் ஆடப்பட்ட இருபத்தேழு போட்டிகளின் புழுதி அடங்கி, மேற்கிந்தியத் தீவுகளின் கைகளில் 2012ஆம் ஆண்டுக்கான உலக Twenty 20 கிண்ணமும் சென்று, சமி, கெயில், சாமுவேல்ஸ் குழுவினரின் சந்தோஷ நடனங்களும் பார்த்து, இலங்கை அணியின் தலைவராக இருந்த மஹேல தனது தலைமைப் பதவி விலகலையும் அறிவித்துவிட்டார்.

ஆனால், நான்காவது தடவையாகவும் ICC கிண்ணம் ஒன்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோற்றிருப்பதும், வெல்லவேண்டிய இலகுவான நிலையிருந்து போட்டியைக் கோட்டைவிட்டதும் இலங்கை ரசிகர்களை மிகக் கவலைப்படுத்தி பலரை விரக்தியின் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளது. ஆனால், வேறெந்த அணிகளையும் விட, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இந்தக் கிண்ணம் போய்ச் சேர்ந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்குமே மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

எழுபதுகளில் இருந்து தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர்களாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் லாரா, சந்தர்போல், இப்போது கெய்ல் போன்ற மிகச் சிறந்த வீரர்களைத் தந்து வந்தாலும் 1979ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் பின்னர், மேற்கிந்தியத் தீவுகளினால் 2004ஆம் ஆண்டு அப்போதைய மினி உலகக் கிண்ணத்தை மட்டுமே வெல்ல முடிந்தது.

1983ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்ற பிறகு மேற்கிந்தியத் தீவுகள் பெரிய எதிர்பார்ப்போடு வந்த முதலாவது இறுதிப்போட்டி இது.

குழம்பிக் கிடந்த, பல்வேறு சிக்கல்களால் பிளவுபட்டுக்கிடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஒன்று திரட்டி, ஒற்றுமைப்படுத்தி, அதிலுள்ள குழப்படிகாரர்களையும் சேர்த்து, பிரகாசிக்கச் செய்து, தலைவராகத் தன்னை நிரூபித்துள்ளார் டரன் சமி.


இவரைப் பற்றியும் எக்கச்சக்க விமர்சனங்கள்... இந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குள்ளேயே இருக்கத் தகுதியில்லாதவர் இவர், இதற்குள் இவருக்குத் தலைமைப் பதவியா என்று...

சிரித்துக்கொண்டே அனைத்தையும் சவாலாக எடுத்துக்கொண்ட சமி, கிண்ணத்தைத் தனதாக்கியதன் பின் "இது கரீபியன் தீவுகளுக்கான கிண்ணம்" என்று பெருமையுடன் சொல்லி, மேற்கிந்தியத் தீவுகளின் பெருமைக்குரிய கிரிக்கெட் சரித்திரத்தின் மற்றுமொரு பெயர் சொல்லக் கூடிய தலைவராகத் தன் பெயரைப் பதிந்துள்ளார்.


இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி வந்த இரு அணிகளுமே பொருத்தமான, திறமையான, போட்டிகளின்போது தத்தம் திறமைகளை மிக அற்புதமாக வெளிப்படுத்தக்கூடிய அணிகள் தாம்.

இலங்கை, பாகிஸ்தான் அணியைத் தன் பந்துவீச்சு, சாதுரியமான தலைமைத்துவம், களவியூகம் போன்றவற்றால் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. மேற்கிந்தியத்தீவுகள் தம்மை முதல் சுற்றில் வென்ற அணியான அவுஸ்திரேலிய அணியை கெய்ல் என்ற சூறாவளியின் அதிரடியில் ஜெயித்து இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இருந்தது.


இலங்கை அணியும் ஏற்கெனவே Super 8 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வெற்றிகொண்டிருந்தது. அதேபோல உலக T20 போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முதல் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியிலும் வெற்றிகொண்டிருந்தது.

இதனுடனும், பாகிஸ்தானை வென்ற உற்சாகத்துடனும் இலங்கை நம்பிக்கையுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாலும், அவுஸ்திரேலியாவை அடித்த மரண அடி தந்த அபரிதமான நம்பிக்கையும் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் போன்றோர் இருந்த தொடர்ச்சியான அசுர form உம் மேற்கிந்தியத் தீவுகளை இலங்கையை விட அதிகமாக வாய்ப்புள்ள அணியாக மாற்றியிருந்தது.

ஆடுகளம் பற்றிய எதிர்பார்ப்பும் கேள்வியும் கூட இருந்தது... ஆனால் இலங்கையின் பலமான சுழல்பந்துவீச்சை மேலும் சாதகமாகப் பயன்படுத்த இலங்கை ஒரேயடியாக முயலாது என்பது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.


சுனில் நரேனும் பத்ரியும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் அதே சுழலைப் பயன்படுத்தி வெற்றிபெற உதவக்கூடும் என்ற காரணத்தால், இலங்கை அதிகம் திரும்பும் கோணம் இல்லாத ஆடுகளத்தை விட, கொஞ்சம் வேகம் குறைவான, பந்து அதிகம் மேலெழாத ஆடுகளத்தை விரும்பலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவே நடந்தது.

இலங்கை - மேற்கிந்தியத்தீவுகள் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற மகளிர் உலக Twenty 20 கிண்ணப் போட்டியின் இறுதிப்போட்டியில் இரு அணிகளுமே 140 ஓட்டங்கள் மட்டத்தை எட்டியதால் அப்படியே இந்தப் போட்டியின் ஓட்ட எண்ணிக்கையும் இருக்கும் என்று நம்பப்பட்டது.

நாணய சுழற்சியில் வென்ற உடனே மேற்கிந்தியத்தீவுகளின் தலைவர் சமி, வழமையாக R.பிரேமதாச மைதானத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்களோ அதையே செய்தார்.

ஆனால் ஆரம்பம் முதலே இலங்கையின் பந்துவீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரிசையை உருட்டி எடுத்தார்கள். இலங்கை ரசிகர்களாலும் நேசிக்கப்பட்ட கிறிஸ் கெய்ல் - அஜந்த மென்டிசின் பந்துவீச்சில் உருட்டப்பட்டது இலங்கை அணி பாதிக் கிண்ணத்தை வென்றதற்கு சமானம் என்று ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்திருந்தனர்.


12 ஓவர்களில் முக்கிய விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாறிக்கொண்டிருந்தவேளை இப்படி இறுதிப் போட்டி சப்பென்று ஆகிறதே என்று எல்லோரும் யோசித்த நேரம் தான், மார்லன் சாமுவேல்ஸ் தனக்குள் இருந்த ராட்சசனை வெளியே எடுத்துவிட்டார். அடியா அடி?

உலகின் மிகச் சிறந்த Twenty 20 வீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்கவுக்கு விழுந்த அடி இதுவரை அவர் வாங்காதது... (விராத் கோஹ்லி மட்டும் சில தடவை ஒருநாள் போட்டிகளில் இவரை இதற்கு முன் கவனித்திருந்தார்).

வழமையாக மாலிங்கவின் பந்துவீச்சில் ஒரு சிக்சர் அடிக்கவே தடுமாறும் வீரர்கள் மத்தியில், சிரமமில்லாமல், தனது சக்திவாய்ந்த அடிகள் மூலமாக ஐந்து சிக்சர்களை வெளுத்திருந்தார். சாமுவேல்ஸ் கொடுத்த உந்துதலுடன் அணித்தலைவர் சமியும் இறுதி நேரத்தில் வேகமாக ஓட்டங்கள் குவிக்க மேற்கிந்தியத்தீவுகள் இலங்கை அணிக்கு 138 என்ற இலக்கை வழங்கி இருந்தது. சாமுவேல்ஸ் இதில் பாதிக்கும் அதிகமான ஓட்டங்கள்...  56 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள், 3 நான்கு ஓட்டங்களுடன் 78 ஓட்டங்கள். இவரது அதிகபட்ச Twenty 20 சர்வதேச ஓட்டங்களைப் பதிவு செய்யத் தேர்ந்தெடுத்த நாளைப் பாருங்கள்...

அஜந்த மென்டிசின் மந்திர வித்தை ஜொலித்த அந்த நான்கு ஓவர்களும் நான்கு விக்கெட்டுக்களும் (4 ஓவர்கள் 12 ஓட்டங்கள் 4 விக்கெட்டுக்கள்) மாலிங்கவின் நான்கு ஓவர்களில் வழங்கப்பட்ட 54 ஓட்டங்களில் அடையாளமே இல்லாமல் போனது.

இந்த இலக்கு இலங்கையினால் எட்டப்படக் கூடியது என்றே நினைக்கத்தோன்றியது.

மஹேல ஜெயவர்தன, டில்ஷான், சங்கக்கார ஆகியோர் உள்ள ஒரு துடுப்பாட்ட வரிசையினால் இதைக்கூட அடைய முடியாவிட்டால் பிறகென்ன? அதுவும் நரேன் தவிர மேற்கிந்தியத்தீவுகளின் பந்துவீச்சு பெரிதாக இத்தொடரில் எதையும் செய்துகாட்டியிருக்கவில்லை.


ஆனால் இறுதிப் போட்டிக்கு என்று சிறப்பானவற்றை எல்லாம் பதுக்கி வைத்திருந்தது போல ராம்போல், பத்ரி ஆகியோர் கொடுத்த ஆரம்பமும், அதைத் தொடர்ந்து சாதுரியமாக சமியின் சுழல்பந்து வீச்சாளர்களின் வியூகமும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களைத் திணறடிக்க, தேவையில்லாத ஆட்டமிழப்புக்கள் ஆரம்பித்தன. தற்கொலையை ஒத்த ஆட்டமிழப்புக்கள்...

அதிலும் சுவாரஸ்யமாக, இலங்கை ஜனாதிபதி வந்து ஒரு இறுதிப்போட்டியைப் பார்த்தால் அந்தப் போட்டியில் இலங்கை தோற்கும் என்று ஒரு (மூட) நம்பிக்கை நிலவுவதை மீண்டும் நிரூபிப்பதைப் போல ஒரே ஒரு விக்கெட்டை இழந்து 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணி, ஜனாதிபதியின் வருகையைப் பெரிய திரையில் காட்டிய பின்னர் மளமளவென்று விக்கெட்டுக்களை இழந்தது. மழை வரலாமென்று முதலில் இருந்தே அஞ்சப்பட்டு வந்ததால், ஓட்டவேகமும் மந்தமாகி, விக்கெட்டுக்களும் போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஓட்டவேகத்தை அதிகரித்தாலேயே டக்வேர்த்-லூயிஸ் மழை விதி பிரயோகிக்கப்பட்டால் வெற்றிகிட்டும் என்ற நினைப்போடு அவசரமாக ஆட முற்பட்டு மஹேலவும், மத்தியூசும் தேவையற்ற முறையில் ஆட்டமிழக்க, இலங்கை அணி நிலைகுலைந்தது.


சோர்ந்து போன அரங்கம் நிறைந்த 35,000 ரசிகர்களுக்கும் ஆறுதலை சிறிது நேரம் அதிரடி மூலம் வழங்கினார் நுவான் குலசேகர. இறுதியாக ஒன்பது ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை நரேனும், ஆறு ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை சமியும் எடுத்து இலங்கையை வாரிச் சுருட்டிக் கொண்டார்கள்.

தோல்வி அடையும் நிலையில் இருந்து போராடி வென்ற வெற்றி இது என்பதால் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி மிகுந்த பாராட்டுக்குரியது.


மிக நீண்ட காலக் காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த கிண்ணத்தினைக் கையில் ஏந்த முதலே தங்கள் ஆனந்த நடனம், கூத்துக் கொண்டாட்டங்களை மைதானத்திலேயே அரங்கேற்றினார்கள் இந்தக் குதூகல வெற்றி அணி.

ஒற்றுமையும் உத்வேகமும் நிறைந்த இந்த அணி முதல் சுற்றில் எந்தவொரு வெற்றியும் இல்லாமல் ஒரு புள்ளியோடு அடுத்த சுற்றுக்குள் நுழைந்திருந்தது. Super 8 இலும் தடுமாறியிருந்தது. ஆனால், கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தேவையான நேரத்தில் உச்ச பட்ச சக்தியைப் பயன்படுத்திய அணி இப்போது புதிய உலக Twenty 20 சாம்பியன்கள்.


இவர்களது முயற்சி, துணிச்சல், உத்வேகம் ஆகியன மட்டுமன்றி எதையும் ரசித்துக் கொண்டே செய்கின்ற இவர்களது மனப்பாங்கும் வெற்றிகளைக் கொண்டாடும் அவர்களது நடனங்களும் - குறிப்பாக கெய்லின் கங்க்நாம் நடனம் - இலங்கையிலும் அணி வேறுபாடு தாண்டி ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது.

இறுதிப் போட்டி வெற்றியைத் தொடர்ந்தும் அந்த உற்சாகமான நடனங்கள் ரசிகர்களை சொந்த அணி தோற்ற கவலையைக் கொஞ்சம் மறக்கடித்தது. இலங்கை ரசிகர்களும் வெற்றிபெற்ற அணியின் வீரர்கள் தமக்கு வழங்கிய நடன விருந்தினை ரசித்து வாழ்த்தியிருந்தார்கள்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் கூட வென்றபின்னர் வழங்கிய பேட்டியில் தங்கள் தாய் நாடு தோற்றபிறகும் பொறுமையாக இருந்து ரசித்து பாராட்டி, அமைதிகாத்த ரசிகர்களை வாழ்த்தி இருந்தார்.


இலங்கை அணி 2007ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோற்றபின்னர், இம்முறை உலக Twenty 20 உடன் சேர்த்து நான்கு இறுதிப் போட்டிகளில் தோற்றுள்ளது.

மற்றைய இரண்டு -
2009 உலக Twenty 20 - பாகிஸ்தானிடம்
2011 உலகக் கிண்ணம் - இந்தியாவிடம்

இறுதிவரை வந்து நான்கு தடவை தோற்றுப்போகிறோம் என்றால் அதில் உள்ள பிரச்சினை என்னவென்று இலங்கை அணி இனம்கண்டு கொள்ளவேண்டுமே... இப்போதிருக்கிற மூத்த வீரர்களும் இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் விலகிச் சென்றால் அதன் பின் இலங்கை அணி?

இதனால் தான் மஹேல ஜெயவர்தன உடனடியாக (தாங்கள் கலந்துபேசி முன்னரே எடுத்த முடிவென்று கூறியிருந்தார்) தான் இலங்கையின் Twenty 20 அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இனி அநேகமாக அஞ்சேலோ மத்தியூசின் தலைமையில் அணி புதுமெருகு பெறும் என்று நம்பப்படுகிறது.


அரையிறுதியில் மிகச் சிறப்பாகப் பந்துவீசியும் ரங்கன ஹேரத்தை இறுதிப்போட்டிக்கான அணியில் ஏன் சேர்க்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் மஹேல சொல்வது போல, சில நுட்பங்களும் சில முடிவுகளும் வென்றால் பாராட்டப்படும்; தோற்றால் கேள்விக்குட்படுத்தப்படும்... அன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகளின் வல்லமையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போயிருந்தது.

உலகத்தில் பெருமதிப்பு பெற்றிருந்த அவுஸ்திரேலிய நடுவரான சைமன் டௌபில் நடுவராகத் தனது இறுதி சர்வதேசப் போட்டியினை இந்த இறுதிப் போட்டியில் நிறைவு செய்தார் என்பதும் ஞாகப்படுத்தக்கூடிய ஒன்று.

உலக Twenty 20 தொடரில் சகலதுறை வீரராகப் பிரகாசித்த அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் தொடரின் நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

கிரிக்கெட் நிபுணர்கள் & பிரமுகர்களால் தெரிவு செய்யப்பட இந்த உலகக் கிண்ணத்தில் பிரகாசித்த ICC அணி -
மஹேல ஜயவர்தன - இலங்கை - தலைவர்
ஷேன் வொட்சன் - அவுஸ்திரேலியா
க்றிஸ் கெய்ல் - மேற்கிந்தியத் தீவுகள்
விராட் கோஹ்லி - இந்தியா
லூக் ரைட் - இங்கிலாந்து
பிரெண்டன் மக்கலம் - நியூசிலாந்து - விக்கெட் காப்பாளர்
மார்லன் சாமுவேல்ஸ் - மேற்கிந்தியத் தீவுகள்
லசித் மலிங்க - இலங்கை
சயீத் அஜ்மல் - பாகிஸ்தான்
மிட்செல் ஸ்டார்க் - அவுஸ்திரேலியா
அஜந்த மென்டிஸ் - இலங்கை
சுரேஷ் ரெய்னா - இந்தியா - 12ஆவது வீரர்.

பொருத்தமான ஒரு சாம்பியனாக மேற்கிந்தியத் தீவுகள் கிண்ணத்தை வென்றுள்ள அதேவேளை, சிதைந்து போயிருந்த, தீராப் பிரச்சினைகளில் சிக்கியிருந்த (இன்னமும் சிக்கியுள்ள) அவர்களது கிரிக்கெட் சபை, வீரர்களின் நிலையில் முன்னேற்றம் கொண்டுவர இந்த வெற்றி மாபெரும் உந்துதலாக அமையும்.

இதேவளை மீண்டும் ஒரு இறுதித் தோல்வி இலங்கை ரசிகர்கள் பலரை வேதனையும் விரக்தியும் அடைய வைத்திருகின்றன. இலங்கை கிரிக்கெட் அணி தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய தருணம் இது. ஆனால், போட்டிகளை குறைகள் எதுவும் இன்றி, குற்றச் சாட்டுக்கள் எதுவும் இன்றி நடத்தி நல்லதொரு ஏற்பாட்டாளராகப் பெயர் பெற்று விருந்தோம்பும் பண்பாலும் ரசிகர்கள் வழங்கிய ஆதரவாலும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது இலங்கை.

இதேவேளை பெண்கள் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய மகளிர் அணி சுவீகரித்துக்கொண்டது.


இங்கிலாந்து மகளிர் அணியை நான்கு ஓட்டங்களால் வீழ்த்தி இரண்டாவது தொடர்ச்சியான முறை கிண்ணத்தை அவுஸ்திரேலியா வசப்படுத்திக்கொண்டது.

உலக Twenty 20 கிண்ணத்தின் மேலும் சுவாரஸ்யத் தருணங்கள், நட்சத்திரங்கள், சாதனைகள் மற்றும் வேதனைகள், இன்னும் சில புதிய விடயங்கள் தொகுப்பாக இதே பகுதியில் இன்னும் ஒரு சில நாட்களில் வரும்...

You May Also Like

  Comments - 0

  • T.SABA Tuesday, 09 October 2012 06:02 PM

    //"அதிலும் சுவாரஸ்யமாக, இலங்கை ஜனாதிபதி வந்து ஒரு இறுதிப்போட்டியைப் பார்த்தால் அந்தப் போட்டியில் இலங்கை தோற்கும் என்று ஒரு (மூட) நம்பிக்கை நிலவுவதை மீண்டும் நிரூபிப்பதைப் போல"// சரியக சொன்னீங்க லோஷன்னா, ஆனாலும் நீங்கள் கூட Bracket போட்டு நம்பிக்கை சொல்வதைப்பார்த்தால், இதில் ஏதோ ஒரு சிக்கலான முடிச்சு ஒன்று ஒழிந்திருப்பது போலவே தோன்றுகிறது...லொல் வாழ்த்துக்கள் அண்ணா நல்லதொரு ஆய்வு, வாசிப்பதற்கு திருப்தியாக இருந்தது.

    Reply : 0       0

    pirakash Tuesday, 09 October 2012 06:33 PM

    வேறெந்த அணிகளையும் விட, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இந்தக் கிண்ணம் போய்ச் சேர்ந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்குமே மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

    Reply : 0       0

    uvais.m.s Wednesday, 10 October 2012 07:59 PM

    நல்லதொரு கட்டுரை வாழ்த்துக்கள் ....இலங்கை அணியினர் ஒவ்வொரு தொடரிலும் ஆரம்பம் முதல் அசத்தலாக வந்து கடைசி இறுதி போட்டியில் தோற்றுப்போவது ஏன் என்பது தான் புரியவில்லை. இலகுவாக வெல்லும் வாய்ப்புக்கள் இருந்தும் இப்படி தோற்றுப்போய் இலங்கை ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்குவது தொடர்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .