2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

‘அல் - அர்ஹம் வித்தியாலயத்துக்கான புதிய காணிக்கு நிதியை ஒதுக்கவும்’

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

 

அம்பாறை, அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலயத்துக்கு, புதிய காணியைக் கொள்வனவு செய்வதற்கான நிதியை ஒதுக்குமாறு, கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணியிடம், மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, இன்று (23) கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

"அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலயம், 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால், முற்றாகச் சேதமடைந்தது.

"2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதியிலிருந்து 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை, தனியாருக்குச் சொந்தமான காணிகளில், கொட்டில்கள் அமைக்கப்பட்டு, தற்காலிகமாக இப்பாடசாலை இயங்கி வந்தது.

"அட்டாளைச்சேனை றகுமானியாபாத் பள்ளிவாசலால் வழங்கப்பட்ட காணியில், GTZ அனுசரணையுடன், 12 வகுப்பறைகளுடன் கூடிய 2 மாடிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு, 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இப்பாடசாலை திறந்துவைக்கப்பட்டது.

"சுனாமியால் இப்பாடசாலை முற்றாகப் பாதிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் எவையுமின்றித் தற்காலிகக் கொட்டில்களில் இயங்கி வந்த நிலையிலும், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய இப்பாடசாலை மாணவர்கள், 100 சதவீதம் சித்திபெற்று, கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை ஒரு சிறப்பம்சமாகும்.

"இப்பாடசாலையில், 517 மாணவர்களுக்கு, 17 வகுப்பறைகள் தேவையாக உள்ளன. ஆனால், தற்போது 12 வகுப்பறைகள் மாத்திரமே உள்ளன. தற்காலிக தகரக் கொட்டில்களில் 2 வகுப்புகள் இயங்கி வருவதுடன், 3 வகுப்புக்கள் இடமின்றி சமாந்தர வகுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

"இப்பாடசாலையின் நலன்கருதி, பாடசாலைக்கு அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை, காணிச் சொந்தக்காரரின் சம்மதத்துடன் பெறுவதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால், இக்காணிக்கான விலைமதிப்பு, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி மதிப்பிடப்பட்டுள்ளது.

"இக்காணியைக் கொள்வனவு செய்வதற்கான நிதியைப் பெறுவதற்கு, கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு, மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலைச் சமூகமும்  பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போதும், இக்காணி கொள்வனவுக்கான நிதியொதுக்கப்படவில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .