2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

‘இனவாதத்தை முழுமையாக ஒழிக்க முடியாது’

Yuganthini   / 2017 மே 21 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.சுகிர்தகுமார்

“இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை, இந்த அரசாங்கம் அல்ல எந்த அரசாங்கத்தாலும் நூறுசத வீதமளவில் இல்லாமல் செய்யமுடியாது. அவ்வாறு செய்ய முடியுமென யாராவது சொன்னால், அது முட்டாள்தனமானது” என, கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

மேலும், “வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் தலைமைகள், மனமார பேச வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசுவோமானால் எதனையும் சாதிக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று - கோளாவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலையை, சனிக்கிழமையன்று (20) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், மேலும் கூறியதாவது,

“சிறுபான்மை மக்களை, தங்களது அடிமைகளாக வைத்திருக்கலாம் என இனவாதிகள்  எதிர்பார்க்கின்றார்கள். மேலும்,  வடக்கு, கிழக்கிலும் அதற்கு அப்பால் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகம், அதிகாரம் அல்லது உரிமை என்கிற தோரணையில் எதையும் கேட்ககக்கூடாது எனவும் வாய்மூடி மௌனிகளாகவே இருக்க வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதேபோல், அரசியல் தலைவர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள்.

“இதற்கிடையில், முஸ்லிம், தமிழ் தலைவர்கள் ஒன்றாகப் பயணிப்பதற்கு, இதுவரையில் தயாராக இல்லை என்பதே எங்களுக்குள் உள்ள பிரச்சினையாகும். பரஸ்பரம் எங்களுக்குள் உள்ள பிரச்சினைகளைச் சொல்லிக்கொண்டு, கடந்தகால நிகழ்வுகளையும் முறுக்கேற்றுகின்ற வசனங்களையும் பேசிக்கொண்டு, இன ரீதியான சாயத்தைப் பூசிக்கொண்டு இருப்போமேயானால், இந்த நல்லாட்சியிலே எதனையும் சாதிக்க முடியாது.

எதிர்வரும் காலம், எமக்கு மிகவும் கஷ்டமான காலம். இக்காலத்தில், எமக்குப் பலமான அரசியல் சக்தி இருக்கும்போதுதான், எமது தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும். ஆகவே, எதிர்காலத்திலும் கடந்த காலத்தைப் பற்றி அல்லது மண்மீட்புப் போராட்டம், உரிமை என்பவற்றைப் பேசிக்கொண்டிருப்போமானால், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை இன்னும் பின்னடையும்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X