2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

கச்சதீவுப் பகுதியில் இலங்கைக் கடற்படையின் 20 கப்பல்கள் குவிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொன்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்களை நடத்தி, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினார்கள் என்றக் குற்றச்சாட்டையடுத்து, கச்சத்தீவுப் பகுதியில் மேலதிகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இந்தச் சம்பவம் தொடர்பில், இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவிக்கையில்,  

“இராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், மீன்பிடித்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதிக்கான குறி அடையாளம் (டோக்கன்) பெற்றுக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (16) காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றோம். 

“அதேவேளை, கச்சதீவுப் பகுதியில், இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான, 20க்கும் மேற்பட்ட ரோந்துக்கப்பல்கள் இரவு, பகலாக ரோந்துப் பணிகளில் ஈடுபட்டதால், மீன்பிடிக்க முடியாமல் தடுமாறினோம்.  

“எனினும், பதற்றத்தின் மத்தியில், தனுஷ்கோடிக்கும் கச்சதீவுக்கும் இடையே மீன்பிடித்து விட்டு, அன்று காலை கரைக்குத் திரும்பும் போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்தி, படகுகளை நிறுத்தச் சொன்னனர். 

“100க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்தினர். அதுமட்டுமன்றி, இப்பகுதியில் நின்றால் கைது செய்வோமென எச்சரிக்கை விடுத்து விரட்டியடித்தனர். இதனால் படகுகளுக்கு, இந்திய ரூபாய் பெறுமதியில் தலா, 50 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. 

“டீசல் விலையுயர்வு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் புதிய மீன்பிடித் தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலால் நாம் கவலை அடைந்துள்ளோம். அதனால், மீன்பிடித் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலை விட்டு, மாற்றுத் தொழிலுக்குச் செல்கின்றனர். இதனால் மீன்பிடிக்கக் செல்லத் தொழிலாளர்கள் இல்லாமல் உள்ளது” என்றும் தெரிவித்தனர்.  

“குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் நிலையில், கடந்த ஒரு வார காலமாக இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலால் அச்சம் நிலவுகிறது. 

“எதிர்வரும் நாள்களில் மீன்பிடித் தொழிலாளர்கள் இல்லாமல் பாரம்பரியத் தொழிலான மீன்பிடித் தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.  

மத்திய மாநில அரசுகள், இலங்கை அரசாங்கத்துடன் பேசி, பிரச்சினையில்லாமல் தமிழக மீனவர்கள், நடுக்கடலில் மீன்பிடிக்க நிரந்திரத் தீர்வு பெற்றுத் தர வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--