அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 நவம்பர் 26 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய பருவ மழையைக் கருத்தில்கொண்டு, கல்முனை மாநகர பிரதேசங்களில் அனர்த்த பாதுகாப்பு முகாமைத்துவச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு, கல்முனை மாநகர சபையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு, சுகாதார, வேலைப் பிரிவுகளின் அனைத்து ஊழியர்களும் 24 மணி நேரமும் அனர்த்த பாதுகாப்பு, முகாமைத்துவச் செயற்பாடுகளுக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறைகள் யாவும் இரத்துச் செய்யப்படுவதாகவும் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் அனர்த்த முகாமைத்துவ ஒழுங்கமைப்புக் கூட்டம், கல்முனை மாநகர மேயர்செயலகத்தில் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று முன்தினம் (24) நடைபெற்றது.
இதன்போதே அவசரகால நிலை தொடர்பிலான அறிவுறுத்தல்களை, மேயர் வெளியிட்டார்.
மழை, காற்று உள்ளிட்ட அனர்த்தங்களில் இருந்து மாநகர பிரதேசங்களையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, ஊழியர்கள் உஷார் நிலையில் இருப்பதுடன், வாகனங்கள், உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் எனவும் மேயர் அறிவுறுத்தியதுடன், தேவையான பொருள்களை அவசரமாகக் கொள்வனவு செய்யுமாறும் பணிப்புரை விடுத்தார்.
அதேவேளை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி வடிகான் துப்பரவு செய்யும் பணிகளை நேர்த்தியாகவும் துரிதமாகவும் செய்து முடிப்பதற்கான பணிப்புரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய மேயர், சாய்ந்தமருது தோணா உள்ளிட்ட முகத்துவாரங்களின் ஊடாக வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கு ஏற்ற நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டார்.
அனர்த்தங்கள் ஏதும் நிகழுமாயின் சம்மந்தப்பட்ட இடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தங்க வைப்பதற்கான பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களை பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.
பாதிக்கப்படும் மக்களை போஷிப்பதற்கான அனுசரணையை பிரதேச செயலகங்கள் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வேண்டுகோளை பிரதேச செயலாளர்களிடம் விடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .