2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பரீட்சைத் தடையை எதிர்த்து மாணவர்கள் வெளியேற்றம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூலை 19 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்தும் அனைத்த மாணவர்களையும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்குமாறு கோரியும், வர்த்தக முகாமைத்துவ மாணவர்கள், நேற்று (18) பல்கலைக்கழகத்தை விட்டு வேளியேறினர்.

பல்கலைக்கழகத்தில் தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு, பரீட்சை எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சகல மாணவர்களையும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்குமாறும், வகுப்புத்தடை செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்குமாறும் தாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

80 சதவீதமான வரவை 50 சதவீதமாகக் குறைத்து, பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சகல மாணவர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டுமென மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த கோரிக்கையை, பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்ததை அடுத்து, மாணவர்கள், பல்கலைக்கழகத்தை விட்டு வேளியேறினர்.

அத்துடன், பரீட்சை எழுதுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள மாணவர்களும் ஏனைய மாணவர்களை பரீட்சைக்கு அனுமதிக்குமாறு கோரி, பரீட்சையை பகிஷ்கரித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமிடம் வினவிய போது,

“மாணவர்கள் சிலருக்கு, விரிவுரைகள், வெளிக்களப் பயிற்சிகள் மற்றும் பாடவிதான செயற்பாடுகளில் 80 சதவீதமான வரவு போதவில்லை. அந்த சில மாணவர்களுக்கே, இவ்வாறு பரீட்சை எழுதுவதற்குரிய அனுமதி அட்டை வழங்கப்படவில்லை. எனினும், அனுமதி அட்டை வழங்கப்பட்ட மாணவர்களும் பரீட்சையை பகிஷ்கரித்துள்ளனர்.

“ஏனைய பீடங்களில் பரீட்சைகள் முடிவடையவுள்ள நிலையில், வர்த்தக முகாமைத்துவ மாணவர்கள், வேண்டுமென்று ஏனைய மாணவர்களையும் அழைத்துக்கொண்டு, இந்த பரீட்சை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

“மேலும், வகுப்பு தடைசெய்யப்பட்டுள்ள 6 மாணவர்களுக்கு எதிரான விசாரணை முடிவுற்ற பின்னர், அம்மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றலாம்” என்றார்.

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களுக்கு அமைய 80 சதவீதத்துக்கும் குறைவான வரவைக் கொண்ட மாணவர்களுக்கு, பரீட்சை எழுதுவதற்கு எந்தப் பல்கலைக்கழகத்திலும் அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .