Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல். மப்றூக்)
கல்முனைப் பிரதேசக் கடற்பரப்பில் டைனமைட் வெடித்தல் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட முறைகள் மூலம் சிலர் மீன்பிடித்து வருவதால், கடற்றொழில் நடவடிக்கைகளில் பாரிய பிரச்சினைகளை தாம் எதிர்நோக்கி வருவதாக கல்முனைப் பிரதேச மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
டைனமைட் வெடி வைத்து மீன் பிடிப்பதால் கடலிலுள்ள மிகச் சிறிய மீன்கள் மற்றும் அரிய கடல் வாழ் உயிரினங்கள் போன்றவை அழிவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கல்முனைப் பிரதேசக் கடற்பரப்பில் டைனமைட் வெடி மூலம் சட்டவிரோதமாக மீன்பிடிக்கப்படுவது குறித்து அப்பகுதி மீனவர்கள் கல்முனைப் பிரதேச கடற்றொழில் பரிசோதகரிடம் முறையிட்டும் இதுவரையில் நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் கல்முனைப் பிரதேசத்தில் தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றபோதும், கல்முனைப் பிரதேச மீனவர்கள் ஏனைய பிரதேசங்களில் தங்கியிருந்து மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கல்முனைப் பிரதேச மீனவர்கள் கூறுகின்றனர்.
மாளிகைக்காடு சாய்ந்தமருது கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை மற்றும் நீலாவணை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கல்முனைப் பிரதேசத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனைப் பிரதேசத்தில் சுமார் 300 ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 200 சிறிய படகுகளும், நூறு சிறிய தோணிகளும் காணப்படுகின்றன.
முன்னர் கல்முனைப் பிரதேசத்தில் நாளொன்றுக்கு சுமார் 07 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய மீன்கள் கிடைத்து வந்ததாகவும், தற்போது ஆயிரம் கிலோகிராம் மீன்கள் கிடைப்பதே கஷ்டமாக உள்ளதாகவும் இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .