2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தேசிய விளையாட்டுப் போட்டிக்கு அழைப்புக் கடிதம் பிந்திக் கிடைத்த விவகாரம்:வேப்பையடி கலைமகள் வித்தியா

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல். மப்றூக்)

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவிருந்த சம்மாந்துறை வேப்பையடி கலைமகள் வித்தியாலய மாணவியொருவருக்கு நேற்றைய தினமே அதற்கான அழைப்புக் கடிதங்களை சம்மாந்துறை கல்வி வலயத்தினர் ஒப்படைத்திருந்ததாக அப்பாடசாலையின் அதிபர் எஸ்.பாலசிங்கம் தெரிவித்தார்.

மேற்படி பாடசாலையைச் சேர்ந்த எஸ்.தமிழ்ச்செல்வி எனும் மாணவி தேசிய விளையாட்டுப் போட்டியில் 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் கலந்து கொள்வதற்கு தெரிவாகியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த மாணவியை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு கோரும் கடிதமும் அது தொடர்பான ஆவணங்களும் நேற்றுக் காலை அந்த மாணவியின் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. சம்மாந்துறை கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் இந்த ஆவணங்களை ஒப்படைத்திருந்தார்.

ஆனால், குறித்த மாணவி கலந்து கொள்ளும் போட்டி நிகழ்வானது, நேற்றைய தினமே இடம்பெறுமென அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அந்த மாணவியால் அவரின் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

இது தொடர்பில் மாணவி தமிழ்ச்செல்வி கூறுகையில்,

தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளும் ஆவலுடன் இருந்த தனக்கும், தனது பெற்றார், ஆசிரியர்களுக்கும் இச்சம்பவம் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தனக்கான அழைப்பு தாமதித்து அனுப்பப்பட்டுள்ளதால், தேசிய மட்டத்தில் சாதிக்க வேண்டும் எனும் தனது ஆசை நிறைவேறாமல் போய்விட்டதாகவும் அவர் கூறினார்.


நாவிதன்வெளி அன்னமலை வித்தியாலய மாணவிகள் இருவருக்கும் அழைப்புக் கடிதங்கள் உரியவேளையில் கிடைக்காததால் இப்போட்டிகளில் பங்குபற்ற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 29, 30 மற்றும் ஒக்டோபர் 01, 02, 03 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெறுகின்றன.                                                                                                                                                                                                                                                                      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--