2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அமரவீர உறுதி

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

வெள்ளத்தினால் வீடுகளை இழந்தோருக்கு வீட்டுக்கடன் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகள், கைத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமெனவும் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்தார்.

வெள்ள நிலைமைகளைப் பார்வையிடுவதற்காகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் அமரவீர, கல்முனைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனைப் பகுதிக்கும் சென்றிருந்தார்.  

அதன்போது வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் தங்கியுள்ள மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரிக்கு சென்று – அங்குள்ள மக்களின் நலன் குறித் விசாரித்த போதே, அமைச்சர் மேற்கண்ட உறுதி மொழியினை வழங்கினார்.

இதேவேளை, மருதமுனைப் பிரதேசத்திலுள்ள நெசவுக் கைத்தறி ஆடை உற்பத்தியாளர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் இதன்போது உறுதிவழங்கினார்.

இலங்கையில் நெசவுக் கைத்தொழிலுக்கு மருதமுனை பெயர்பெற்ற பிரதேசம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்போது, தம்மை இதுவரை எந்தவொரு கிராமசேவையாளரும் வந்து பார்க்வில்லை என்றும், தமக்கான உணவுகளைச் சமைப்பதற்கான கொடுப்பனவுகளை பிரதேச செயலகம் இன்னும் வழங்கவில்லை என்றும் - இடம்பெயர்ந்த மக்கள் அமைச்சரிடம் முறையிட்டதையடுத்து, இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவினைச் சமைப்பதற்குரிய பொருட்களை கொள்வனவு செய்து கொடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், நலன்புரி நிலையங்களில் இரவு வேளைகளில் தங்குவோருக்கு படுக்கை விரிப்பு உள்ளிட்ட பொருட்களையும், குழந்தைகளுக்கான பால்மாக்களையும் வழங்குமாறும் அமைச்சர் இதன்போது கூறினார்.

அமைச்சருடன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--