2021 மே 06, வியாழக்கிழமை

சம்மாந்துறை கல்லரிச்சர் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கு நடுவே மடுவம் அமைக்கப்பட்டுள்ளமையால் ப

Super User   / 2011 செப்டெம்பர் 17 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

சம்மாந்துறை கல்லரிச்சர் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கு நடுவே அமைந்துள்ள விலங்குகள் அறுக்கும் மடுவத்தினால் அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் குறித்த பிரதேச மக்கள் புகார் தெரிவிப்பதோடு, குறித்த மடுவத்தினை மக்கள் குடியிருப்பற்ற பகுதிக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த மடுவம் அமைந்துள்ள பகுதியில் அஷ் - அஸ்ஹர் பாடசாலை, ஜாரியா பள்ளிவாசல் மற்றும் தாறுல் ஈமான் அநாதைகள் இல்லம் ஆகியவை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி மடுவத்தினால் துர்நாற்றம் ஏற்படுவது ஒரு புறமிருக்க, மடுவம் காரணமாக இப்பகுதியில் ஈக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் அயல் வீடுகளிலுள்ள குழந்தைகள் கடுமையான நோய் தொற்றுகளுக்கு உள்ளாவதாகவும் இங்குள்ள தாயொருவர் கூறினார்.

இதேவேளை, இம்மடுவத்தில் அறுக்கப்படும் மாடுகளின் எலும்பு மற்றும் கழிவுகளை உண்ண வரும் நாய்கள், அவற்றினை மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று போடுவதாகவும், கழிவுகளை தூக்கி வரும் காகங்கள் அவற்றினை கிணறுகளில் போட்டுவிட்டு செல்கின்றன.

இதனால் - தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர். கல்லரிச்சர் பகுதியிலுள்ள இந்த மடுவத்தின் கழிவுகளை நோக்கிவரும் நாய்களால் - பல தடவைகள் பாடசாலை செல்லும் மாணவர்கள் கடியுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயங்கள் குறித்து இப்பகுதி மக்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலுள்ள பொது சுகாதார பரிசோதகர்களிடம் பல தடவைகள் முறையிட்டுள்ளனர். எனினும் சம்மாந்துறை பிரதேச சபையினரே இதற்கு பொறுப்பு எனக் கூறி அவர்கள் நழுவி விட்டுள்ளனர்.

இது தொடர்பில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌஷாத்திடம் இது தொடர்பாக பல தடவைகள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று இங்குள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிபர் ஒருவர் கூறினார்.

இதேவேளை, ஆயுள்வேத வைத்தியசாலையொன்றுக்கான கட்டிடத்தை அமைக்க போவதாக கூறியே, இந்த மடுவத்தினை நிர்மாணித்தவர்கள் பொதுமக்களிடம் கையொப்பத்தினை பெற்று குறித்த மடுவத்தினை மோசடியாய் அமைத்ததாக - இப்பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கூறினார்.

எனவே, மக்களின் சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகவுள்ள மேற்படி மடுவத்தினை மக்கள் குடியிருப்புள்ள தற்போதைய இடத்திலிருந்து அகற்றி, மனித  புழக்கமற்ற இடத்தில் இதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .