2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

'முஸ்லிம் பூர்வீகம் இல்லாமலாக்கப்படுவதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்'

Super User   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}நாட்டில் முஸ்லிம் பூர்வீகம் இல்லாமலாக்கப்படும் கைங்கரியம் மதவாத அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை  எதிர்கொள்வதற்கு எமது சமூகம் ஒன்றுபட வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளா தெரிவித்தார்.

தேசப்பற்று, சமூகப்பற்று, ஊர்ப்பற்று மற்றும் வீட்டுப்பற்று என பல்வேறு வழிகளிலும் மக்கள் பற்றாளர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் மிக முக்கியமானது தனது சமூகம் சார்ந்த பற்றாளர்களாக ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும். அதைத்தான் எமது மார்க்கமும் எமது இறுதி நபி (ஸல்) அவர்களும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்கள் என அவர் கூறினார்.

கல்முனை அஸ் - ஸம்ஸ் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனையில் இடம்பெற்ற  இஸ்லாமிய கலை மற்றும் கலாசார நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,

"இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக  ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அடக்கு முறைகள்,  வன்முறைகள்,  கொடூரங்களுக்கு மத்தியில் எமது சமூகப்பற்று மற்றும் ஒற்றுமை என்பன பூச்சியமாக உள்ளதனாலேயே இன்று எமது சமூகம் தேசிய, சர்வதேச ரீதியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம்.

இஸ்லாம் வலியுறுத்துகின்ற ஒற்றுமை எங்கள் ஒவ்வொருவரிடத்திலும் வர வேண்டும். இன்று பிளவுகள் அதிகரிக்கப்பட்டதனால் கல்வி,  கலாசாரம் மற்றும் வாழ்வியல் போன்ற விடயங்களில் எமது சமூகம் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

அரசியல் ரீதியாகப் பிளவு, மார்க்க ரீதியாகப் பிளவு தன்னலம் என்பது மனித மனங்களில் மேலோங்கி பொதுநலம் என்பது அணுவளவும் இல்லாமல் போய்விட்டது. இலங்கை திருநாட்டில் இன்று முஸ்லிம் பூர்வீகம் இல்லாமலாக்கப்படும் கைங்கரியம் சில மதவாத அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எமது சமூகம் கருத்து முரண்பாடுகளுக்கப்பால் ஒன்றுபட்டு இதனை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக வேண்டும். சமூகப் பற்றின் காரணமாகவும்  ஒரு அரசியல்வாதியாகவும் எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று செயற்படும்போது அதில் பல்வேறுபட்ட சிக்கல்களும் விமர்சனங்களும் வருகின்றன.

ஆனால் நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பும் சமூக சேவையில் அதிக ஆர்வம் காட்டி வந்தேன். அப்போது எந்த விமர்சனமும் வரவில்லை. நாம் சுதந்திரமாக செயற்பட்டு விரும்பியதை மக்களுக்காக செய்து வந்தோம். இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் எமது சேவை தொடர்கிறது. அமானிதமாகப்பெற்ற இந்த பதவியை மக்களுக்கான இயலுமான சேவயின் மூலம் அலங்கரிக்க என்னால் முடியுமானதை செய்து வருகிறேன்.

எமது கல்முனைப் பிரதேசத்திதை பொறுத்தவரை அரசியலுக்கப்பால் ஆத்மீக ரீதியாக மிகவும் மிகக்கட்டுக் கோப்பானவர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதுபோல் அரசியல் ரீதியில் ஒரளவு தன்னிறைவு கண்டாலும் மக்கள் வெறுமனே எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளை குறை காண்கின்ற நிலையே காணப்படுகின்றது.

இந்நிலை மாற்றப்பட வேண்டும். எமது கல்முனை பிரதேசத்தில் வீதிகள் மற்றும் இதர தேவைகள் நிறைவேற்றப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றது.

அதற்காக திட்டமிடப்பட்ட ஒரு பொறிமுறையின் அடிப்படையில் தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். மக்கள் தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை அரசியல்வாதிகளை அணுகி சுட்டிக்காட்ட வேண்டும். வெளியில் இருந்துகொண்டு விமர்சித்தல் என்பது எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை பின்நோக்கி கொண்டுசென்று விடும்" என்றார்.


  Comments - 0

  • Rifas Monday, 18 February 2013 06:48 AM

    பரகத் நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் (ககக போ, மங்குனி அமைச்சர் என்றாலும் கச்சிதமாய் கவ்வி கொண்டீர்கள் போங்கள்.)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--