2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இந்துமதத்தை யாராலும் அழிக்க முடியாது: வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்

Thipaan   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


இந்துமதத்தை யராலும் அழிக்க முடியாது. காலத்தால் முந்திய இந்து மதத்தின் மகத்துவம் அறியாமல் மதம் மாறுகின்றவர்களை பற்றி சிந்திப்பதை தவிர்த்து மதத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதனை சிந்தியுங்கள் என திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு இந்துமாமன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில், அறநெறிப்பாடசாலையின் ஊடாக ஆன்மீகத்தை வளர்ப்போம் எனும் கருத்துக்கமைவாக,இராமகிருஷ்ணமிஷன் பாடசாலையில் நேற்று(17)  பெற்றோர்களுடனான விழிப்புணர்வு கூட்டம்  நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன்றைய இளம் சந்ததிகளிடையே இந்துமத உணர்வு அருகி வருவதற்கு முதற்காரணம்  பெற்றோர்களே என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தங்களது குழந்தைகள் கல்வியில் முன்னேறி உயர்பதவிகளுக்கு வரவேண்டும் என்பதில் அவர்கள் வெற்றியடைகின்றார்களே  தவிர ஒழுக்கமுள்ள மதக்கடமைகளை பின்பற்ற கூடியவர்களாக உருவாக வேண்டும் என்பதில் தோல்வியடைகின்றனர்.

பண்ணோடு தேவாரம் பாடுகின்றவர்களை காண்பது அரிது. பரீட்சைக்காக தேவாரத்தை மனனம் செய்யும் குழுந்தைகளை காண்கின்றோமே தவிர இறைவனை நினைந்து பாடுவதற்கான குழந்தைகள் இன்றில்லை.

இந்துதர்ம ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றபோது வேதனம் பெறக்கூடிய இத்தொழில் வாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் இல்லை.

இதற்கு கல்விச்சமூகமும் ஒரு காரணம் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆகவே, பாடசாலைகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறினார்.

அறநெறிக்கல்வியே ஒரு மனிதனை பூரணப்படுத்தும். அதிலும் குறிப்பாக சிறுவர்களை நல்வழிப்படுத்தி ஒழுக்க சீலர்களாக மாற்றுவதற்கு அறநெறிக்கல்வி ஆற்றிவரும் பங்களிப்பு மிகவும் அளப்பெரியதாக அமைந்துள்ளது.

ஆகவே, எதிர்வரும் காலங்களில் அறநெறி நடைபெறும் ஞாயிறு தினங்களில், திருக்கோவில் வலயத்தில் உள்ள பாடசாலைகள் உட்பட பிரத்தியேக வகுப்புக்களை நடத்தும் கல்வி கூடங்களும் பகல் 12மணிவரை எவ்விதமான வகுப்புக்களையும் நடத்த முடியாத இறுக்கமான நடவடிக்கையை, வலயகல்விப்பணிப்பாளர் ஊடாக மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .