2021 மார்ச் 01, திங்கட்கிழமை

'புலமைப் பரிசில் நன்மைகள் முழுமைபெற கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவேண்டும்'

Kogilavani   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

'புலமைப் பரிசில் நன்மைகள் முழுமைபெற, கொடுப்பனவு மற்றும் எண்ணிக்கை என்பவற்றுடன், சமகாலத்தில் இதற்கான வருமான எல்லையும் அதிகரிகக்கப்படல் வேண்டும்' என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'2015 வரவு செலவுத் திட்டத்தில் தரம்-5 புலமைப் பரிசில் வருடாந்தக் கொடுப்பனவு 15ஆயிரம் ரூபாவாகவும் மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலமைப் பரிசில் அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் கிடைக்கவிருக்கின்றது. இதற்காக மாவட்ட வெட்டுப் புள்ளிகளும் குறைக்கப்பட விருக்கின்றது.

இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கும் நாட்டிலுள்ள பிரபலமான பாடசாலைகளுக்கு  மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குமான நடைமுறை 1952இல் ஆரம்பமானது. தற்போது கல்வி அமைச்சின் 2006/27, மற்றும் 2007/04 சுற்றறிக்கைகளின் அடீப்படையில் இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த புலமைப்பரிசில் பரீட்சையில், மாவட்ட வெட்டுப் புள்ளிக்குமேல் புள்ளிபெற்ற மாணவர்கள், கொடுப்பனவு பெறுவதற்கு, அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் வருடாந்த வருமான எல்லை 2002இல் 24 ஆயிரமாக இருந்தது. 2009இல் அத்தொகை 54 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. இற்றைவரை அத்தொகையே வருமான எல்லையாக உள்ளது.

தற்போது, வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, 2015இல் இருந்து புலமைப் பரிசில் கொடுப்பனவு, அதனைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை என்பன அதிகரிக்கப்படவிருப்பதோடு, தகுதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப, மாவட்ட வெட்டுப் புள்ளிகளும் குறைக்கப்படவிருக்கின்றது.

கொடுப்பனவு 15ஆயிரத்தில் இருந்து 25ஆயிரமாகவும் மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படும் அதேவேளை, ஆகக்கூடிய வெட்டுப் புள்ளி 159இல் இருந்து 157ஆகவும் ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளி 155இல் இருந்து 152ஆகவும் குறைக்கப்படவும் இருக்கின்றது.

இந்நன்மைகள் யாவும் தகுதி பெற்ற சகல மாணவர்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கான வருமான எல்லை மட்டுப்படுத்தப்படாமலிருக்கவும் தனிநபர் வருமானம் 2015இல் 4000அமெரிக்க டொலர்களைத் தாண்டிவிடும் என்ற மத்திய வங்கியின் ஆளுநரின் கூற்றுக்கு ஏற்ப, அரசாங்க ஊழியர் அல்லாத தனிநபர் வருமான எல்லையும் அதிகரிக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்' என அந்தக் கோரிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .