Princiya Dixci / 2015 ஜனவரி 29 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோருமாயின் அதனை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, வியாழக்கிழமை (29) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை நடவடிக்கையில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஸ்திரமாகக் கொண்டு நடாத்துவதற்கான முழு ஆதரவினையும் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையானது கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் 22 உறுப்பினர்களைக் கொண்டு, சபை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.
இதேவேளை 2015 ஆண்டின் கிழக்கு மாகாண சபைக்கான வரவு- செலவுத்திட்டம் முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது.
மு.கா. சேர்ந்த 07 உறுப்பினர்களும் முதலமைச்சருக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுக்கு இறுதி நேரத்தில் ஆதரவு தெரிவித்துவிட்டு ஆதரவளிப்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடிப்பதற்கு இரு வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது.
இதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையினால் சபை நடவடிக்கைகளை ஜனவரி 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஜனவரி 12ஆம் திகதி சபை மீண்டும் கூடிய போது வரவு- செலவுத்திட்டத்துக்கான ஆதரவு வழங்குமாறு நாம் கோரினோம்
எனினும், கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மைப் பலத்தை நாங்கள் கொண்டுள்ளதாகவும் அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய உறுப்பினர்களைக் கொண்டு தாங்கள் பெரும்பான்மைப் பலத்துடன் இருப்பதால் எதிர்வரும் 20ஆம் திகதி வரை கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரினர்.
இதனால் சபை நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை பிற்போடப்பட்டன.எனவே, டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தது. இது கவலைக்குரிய விடயமாகும்.
வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்படாமையால் அரச ஊழியிர்களின் சம்பளத்தை கூட வழங்குவதற்கு மாகாண சபையினால் முடியாமல் போனது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் துரித நடவடிக்கை மேற்கொண்டு அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றியைதெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறான சூழ்நிலையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட அழைப்பின் பேரில் 08 மாகாணங்களின் முதலமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அண்மையில் கொழும்புக்கு சென்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி உரையாற்றுகையில், 'எந்தவொரு மாகாண சபையையும் கவிழ்ப்பதற்கோ, ஆட்சி மாற்றம் செய்வதற்கோ, தலையிடுவதற்கோ ஜனாதிபதி என்ற ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் நான் விரும்பவில்லை' என தெரிவித்தார்.
அத்தோடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கலந்துரையாடல், எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கிழக்கு மாகாண சபையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சபையின் தற்போதய நிலை, அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண சபையின் பிந்திய இரண்டரை வருடத்துக்கான முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கோருமாயின் அதனை வழங்கி, சபை நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது.
28 minute ago
49 minute ago
2 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
49 minute ago
2 hours ago
26 Oct 2025