2021 மே 06, வியாழக்கிழமை

கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர் மட்ட கூட்டம்

Thipaan   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித், எஸ்.எல். அப்துல் அஸீஸ்

கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர் மட்டக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்ட முதுமானி எம்.நிஸாம் காரியப்பரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதில் அமைச்சர் ஹக்கீமின் விசேட பணிப்புரையின் பேரில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஆரம்பத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள வரைபை அந்த சபையின் கல்முனை அலுவலகப் பொறுப்பாளர் எம்.எம்.முர்ஷிதா சமர்ப்பித்து விளக்கமளித்தார்.

அத்துடன் கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் அந்த வரைபில் அடங்கியுள்ள முக்கிய முன்மொழிவுகள் குறித்து அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தியதுடன் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில மாற்றங்கள் தொடர்பிலும் பிரஸ்தாபித்தார்.

அதேவேளை, மக்களின் குடியிருப்புக்காக வயல் பகுதியில் 300 ஏக்கர் காணியை நிரப்புவதற்கான அனுமதியை பெறுவதற்கும் சாய்ந்தமருது தோணாவை துரித கதியில் அபிவிருத்தி செய்வதற்கும்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் முன்மொழிவு அமைச்சர் ஹக்கீமினால்; ஏற்றுக்  கொள்ளப்பட்டு, அதற்கான பணிப்புரியும் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, குழாய் நீர் விநியோகம் தொடர்பிலான சில பிரச்சினைகளும் இங்கு முன்வைக்கப்பட்டு அமைச்சர் ஹக்கீமினால் தீர்வுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் கல்முனை, இஸ்லாமாபாத், மருதமுனை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி போன்ற பகுதிகளில் குழாய் நீர் அழுத்தம் போதாமல் இருப்பது தொடர்பிலும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அவற்றுக்கு எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வுகளை எதிர்பார்க்க முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்முனை, சாய்ந்தமருது பகுதிகளில் குழாய் நீர் துண்டிக்கப்பட்டால் மீள் இணைப்பு பெறுவதற்காக அக்கரைப்பற்றுக்கு சென்று கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் சுட்டிக் காட்டினார்.

இப்பகுதிகளில் மாதாந்த கட்டணம் செலுத்துவதற்கு கரும பீடங்கள் இருக்கின்ற போது, மீள் இணைப்பு பெறுவதற்கு மட்டும் ஏன் அக்கரைப்பற்று சென்று கட்டணம் செலுத்த வேண்டிய நிபந்தனை அமுல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதனைக் கவனத்தில் எடுத்த அமைச்சர் ஹக்கீம்;, உடனடியாக இதனைத் தளர்த்தி இப்பகுதிகளிலேயே மீள் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை உடனடியாக செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதேவேளை, இப்பகுதிகளில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் இன்று பல குடும்பங்களாக பெருகியுள்ள போதிலும் ஒரு குழாய் நீர் இணைப்பை மாத்திரமே பெற முடிகின்றது. மேலதிக இணைப்பை பெற முடியாததால் புதிய சந்ததியினர் நிர்க்கதியடைந்துள்ளனர் என்று மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் அமைச்சரிடம் முறையிட்டார்.

இது குறித்து அமைச்சு மட்டத்தில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். இது போன்று இன்னும் பல பிரச்சினைகளுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தார்.

இக்கூட்டத்தில் மு.கா. செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், எம்.ஐ.எம்.மன்சூர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எம்.பரக்கத்துல்லா, எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.நிசார்தீன், மாநகர ஆணையாளர் ஜே.எம்.லியாகத் அலி, மாநகர முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர்  உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .