2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

நினைவுப்படிகக்கல்லை நொறுக்கியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

கல்முனை விளையாட்டு மைதானத்துக்கு  செல்லும் வீதிக்கு பெயரிடப்பட்ட கேட்.முதலியார் எஸ்.எஸ்.காரியப்பர் வீதியின் நினைவுப்படிகத்தை வேட்பாளர் ஹென்றி மகேந்திரன் அடித்து நொறுக்கியது இப்பிரதேசத்தில் இன முரன்பாட்டை ஏற்படுத்தும் செயற்பாகும். இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் வீதிக்கு எம்.எஸ்.காரியப்பரின் பெயரை பதித்து நடப்பட்ட நினைவுப்படிகத்தை ஹென்றி மகேந்திரன் இடித்து நொருக்கியது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில், 

பட்டப்பகலில் சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொண்டு ஹென்றி மகேந்திரன் ஆடிய வெறியாட்டம் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கதுடன் உடனடியாக அவரைக் கைது செய்யவேண்டும்.

கல்முனைப் பிரதேசத்தின் அரசியல் முதுசமாக இன்று மதிக்கப்படும் எம்.எஸ்.காரியப்பர் இனபாகுபாடின்றி முஸ்லிம், தமிழ் மக்களுக்கு சேவையாற்றிய ஒரு தலைவராவார். தமிழ் மக்களின் அபிவிருத்தியிலும், தொழில்வாய்ப்பிலும் முன்னின்று செயற்பட்ட ஒரு தலைவரின் பெயரைக்கூட வைப்பதில் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் இலாபம் தேடுவதற்கு ஹென்றி மகேந்திரனும் அவரது குழுவினரும் செயற்பட்டுள்ளனர்.

அதேபோன்று கல்முனை பொது நூலகத்துக்கு சூட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின் பெயர் பலகையும் இடித்து நொருக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள் தமிழ் மக்களுக்காக பல செயற்பாடுகளை மேற்கொண்டவர். அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்புக்களையும் வழங்கியவர்.

இப்படியாக தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட்டு வந்த இரண்டு அரசியல் பிரமுகர்களின் பெயர்ப்பலகைகளை இடித்து நொறுக்கியதன் ஊடாக தங்களது இனவாத அரசியலை நிருபித்துள்ளனர்.

இவ்வாறான செயல்களை இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

கல்முனை மாநகரின் மேயர் இந்த விடயத்தில் உரிய சட்ட நடவடிக்கையினை எடுக்க வேண்டும். சட்டத்தை கையில்  எடுத்துக்கொண்டு இந்த வெறியாட்டம் ஆடிதை எவராலும் அங்கிகரிக்க முடியாது. உடனடியாக பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்று நமது பெருந்தலைவர் மர்ஹூம் அஸ்ரபை சுடுவதற்கு முனைந்த அதே நபர் இன்று பெயர்ப்பலகையை இடித்து நொருக்கியுள்ளார். இதனை எந்த வகையிலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது. கல்முனை மேயர் தனது அதிகாரத்தை செயற்படுத்த முன்வர வேண்டும்.

அரசியல் களத்தில் ஒரு வேட்பாளராக போட்டியிடும் ஒருவர்  இனவாதியாக, சட்டத்தை கையில் எடுக்கும் ஒரு சண்டியனாக  செயல்படுவதை எந்தவொரு பொதுமகனாலும் அங்கிகரிக்க முடியாது. இன்று இனவாதத்தை இவர்கள் தங்களது முதலீடாக மாற்றுகின்றனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .