2021 மார்ச் 03, புதன்கிழமை

பெரும்போக நெல் கொள்வனவு; ரூ.2 பில். ஒதுக்கீடு

Princiya Dixci   / 2021 ஜனவரி 12 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்ட விவசாயிகளிடருந்து உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு 02 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே தெரிவித்தார்.

விவசாயிகளின் அறுவடைக் களத்துக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் அரசின் தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைய, 2020/2021ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெல் கொள்வனவு, அக்கரைப்பற்று பிரதேச விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் அங்குராப்பண வைபவம்,  அக்கரைப்பற்று நெல் களஞ்சியசாலையில் இன்று (12) நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தும் சபையின் அம்பாறைப் பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.ஆர்.ஏ. சாந்தகுமார தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விவசாயத்துறை அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“அரசாங்கத்தால் இலவச உரம் வழங்கப்படும் விவசாயிகளிடருந்தும் ஒரு ஹெக்டெயருக்கு 1,000 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது. ஒரு விவசாயிடமிருந்து ஆகக் கூடுதலாக 1,500 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்படும்.

“அம்பாறை மாவட்டத்தில் 35 மெட்ரிக்தொன் நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை, அம்பாறை மாவட்டத்திலேயே முதன் முதலாக ஆரம்பித்துள்ளோம்.

“கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ் நிலைக்கு மத்தியில் விவசாயிகளை கௌரவப்படுத்துவதற்காக உங்களின் காலடிக்கு வந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்குரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

“அம்பாறை மாவட்டத்தில் தற்போது மழை காரணமாக அறுவடை செய்யப்படும் நெல் ஈரப்பதமாக காணப்படுவதால் அதனை உலர்த்துவதற்கு ஒரு வார காலத்துக்குள் இயந்திரமொன்றை வழங்கவுள்ளேன்.

“நாட்டில் அரிசித் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசாங்கம் 03 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

“சம்பா மற்றும் பாற்சம்பா ஒரு கிலோகிராம் 52 ரூபாயும், நாடு ஒரு கிலோகிராம் 50 ரூபாய்க்கும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது” என்றார். 

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ, மாவட்டச் செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்க மற்றும் விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .