2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆவேசப்படுவது ‘உயர்பதவி’க்கு அழகல்ல

Editorial   / 2021 ஜனவரி 12 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணர்ச்சி பொங்கி ஆவேசப்படுவது ‘உயர்பதவி’க்கு அழகல்ல

பதவிநிலைகள் உயரும்போது, சிலருக்கு ‘தலைக்கனம்’ ஆகும். பலருக்குத் தலையில் கொம்பு முளைத்துவிடும். இன்னும் சிலருக்குத் ‘தலைக்குனிவு’ (பணிந்து நடத்தல்) கூடும். இவையெல்லாம் விதிவிலக்குகளுக்கு உட்பட்டவை. ஆனால், தலைக்கனம் ஏற்படுவதற்கு, அவர்களுக்குக் கீழிருக்கும் சிலரே, பிரதான காரணகர்த்தாக்களாக அமைந்துவிடுகின்றனர்.

எவ்விதமான அரசியல் கட்சியிலும் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளாத, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகத் தெரிவாவதற்கு முன்னரோ அல்லது, நேற்று வரையிலோ, மிகவும் பக்குவமான சுபாவத்துடனேயே செயற்பாட்டார். ‘சிரித்துக்கொண்டே செயலாற்றும் ஜனாதிபதி’ என்றே பலரும் அறிந்திருந்தனர்.

நிறைவேற்று அதிகாரங்களுடன் பதவியேற்கும் ஜனாதிபதியொருவர், பதவியேற்ற கையுடன் முன்னெடுத்த அதிரடியான நடவடிக்கைகள், நாம் கண்ட கடந்தகால அனுபவங்களாகும். அதில் சிலருடைய நடவடிக்கைகள் கசப்பானவையாகவும் பெரும்பாலானவை நன்மைபயக்கும் விதத்திலும் இருந்தன. பதவியின் இறுதித்தருவாயில், சகலதையும் சுக்குநூறாக்கிவிட்டுச் சென்றிருந்தமையும் யாவரும் அறிந்ததே.

எனினும், புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்றதன் பின்னர், அவருடைய கால்களுக்குக் கட்டுப்போடும் விதத்தில், பல்வேறான நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ‘அரசியல் அனுபவமற்றவர்’ என்ற பட்டப்பெயருடன் பதவியேற்ற அவரது தலைமையிலான அரசாங்கம், கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்துக்குள் சிக்கிக்கொண்டது.

அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தருவாயில், எதிர்க்கட்சியினரின் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டார், ‘பெயில்’ (சித்தியடையவில்லை) என்பதே எதிரணியின் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். அதற்கு (பெயில்) ஜனாதிபதி மட்டுமே பொறுப்புக்கூற முடியாது. அமைச்சரவையினரும் அரசாங்கத்தினதும் ‘கூட்டுப்பொறுப்பு’ ஆகும்.

இதற்கிடையில், அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, “எனது இரண்டாவது பக்கத்தையும் பார்க்க விரும்பினால், அதையும் காட்டத் தயார்; பிரபாகரனை நாம் நாயை போல, நான்கு கால்களில் தவழவிட்டு, முள்ளிவாய்க்காலில் இருந்து பிணமாகக் கொண்டுவந்தோம்” எனக்கூறி, எதிரணியினரைப் போல, மோசமான அரசியலில் ஈடுபடமாட்டேன் எனவும் கூறிவிட்டார்.

இதில், தனக்கு இருமுகங்கள் இருப்பதை ஒத்துக்கொண்டார். மற்றொன்று, இறுதி யுத்தத்தில், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு, அவரது இந்த உரை ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்துவிட்டது.

குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு, ஒவ்வொருக்கும் உண்டு. ஆனால், பதிலளிக்கும் போது சிக்கிக்கொள்ளக்கூடாது. ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யமுடியாது என்பதனால், அதற்கு அப்பால் எவ்விடத்திலும் அவர் உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது. அது, எதிர்த்தரப்பினருக்கு தீனிபோட்டதாக அமைந்துவிடும்.

அதுதான் என்னவோ, ‘யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என வள்ளுவர் பெருந்தகை சொல்லியிருக்கின்றார் என்பதை, நாமும் நினைவுறுத்தி எதனை காக்காவிடினும் நாவைக் காத்தல் சகலரும் நன்மை பயக்கும் என வலியுறுத்துகின்றோம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X