2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

செவிடனிடம் ஊதிய சங்கால் தீவிரமாகும் அபகரிப்புகள்

Editorial   / 2020 நவம்பர் 13 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவிடனிடம் ஊதிய சங்கால் தீவிரமாகும் அபகரிப்புகள்

ஒரு விடயத்தில் நியாயமில்லை எனில், அதற்கெதிரான போராட்டங்கள் வலுபெறும்; எதிர்ப்புக் குரல்களும் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும். அவ்வாறான தருணங்களில் எல்லாம், அதிகாரத்தில் இருப்பவர்கள் வார்த்தை ஜாலங்களால் ஆசுவாசப்படுத்திவிடுவர். ஆனால், உரிமைக்குரலின் சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.

அதில், காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டங்களைக குறிப்பிடலாம். நாளுக்குள் நாள் அவை வலுவடைந்து வருகின்றனவே தவிர, முற்றுப்பெறுவதற்கான எந்த அறிகுறியுமே தென்படவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதட்டாகவும் அதிரடியாகவும் “பூர்வீகக் காணிகள்” அபகரிக்கப்படுகின்றன. யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், மீள்குடியேற்றம், படைகளுக்கான காணி சுவீகரிப்பு, அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளென, வகைகளைக் அதிகரித்துக்கொண்டு காணிகள் அபகரிக்கப்பட்டன. அதற்கெதிரான போராட்டங்கள், அழுத்தங்களுக்குப் பின்னர் ஒருதொகை காணிகள் விடுவிக்கப்பட்டன.

காணிகளை சுவீகரிப்பதில் காண்பிக்கும் வேகம், விடுவிப்பதில் காண்பிக்கப்படுவதில்லை. இதில், விவசாய காணிகளுக்கும் பலவந்தமாக எல்லைக் கற்கள் நாட்டப்படுகின்றமை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும்.

பூர்வீகக் காணிகள் மிகநாசுக்காக சுவீகரிக்கப்பட்டுவிட்டன. தற்போது பலவந்தமான சுவீகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. தனியாருக்குரிய காணிகளும் அபகரிக்கப்படுகின்றன. படையினரின் தேவைப்பாட்டுக்கென அபகரிக்கும் செயற்பாடுகளும் இன்னுமே நிறைவுக்குக் கொண்டுவரப்படவில்லை.

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு பகுதியிலுள்ள பொது மக்களின் காணிகளை, கடற்படையினருக்காகச் சுவீகரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டன. எனினும், அரசியல்வாதிகள், பொதுமக்கள், நவம்பர் 10ஆம் திகதி நடத்திய கடுமையான எதிர்ப்பால், அவை தடுத்து நிறுத்தப்பட்டன.

இதேவேளை, திருகோணமலை தென்னமரவாடி, திரியாயில் தொல்பொருள் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமது காணிகள், விவசாயக் காணிகளென அதன் உரிமையாளர்கள், மனுத்தாக்கல் செய்து இடைக்கால தடையுத்தரவையும் பெற்றுக்கொண்டனர். வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் தொல்பொருள் இடங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினர் இல்லையென்றக் குற்றச்சாட்டுக்கு இன்னுமே தீர்வு காணப்படாமை, செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறதென்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.

ஜனாதிபதியின் அந்தச் செயலணிக்கு கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பின. அப்போதெல்லாம் பதிலளித்த அதிகாரத்தரப்பினர், “நாங்கள் பேசிவிட்டோம். சிறுபான்மையினர் இணைத்துக்கொள்ளப்படுவார்கள், காணிகளுக்குப் பிரச்சினையிருக்காது” என பசப்பு வார்த்தைகளை அள்ளிவீசினர். வாயை அடைத்துவிட்டனர்.

ஆனால், விவசாயக் காணிகள் கூட, தொல்பொருள் இடங்களென அடையாளப்படுத்தும் அவல நிலைக்குள், சிறுபான்மையினர் தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு,கிழக்கைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருக்கும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்த, ஜனாதிபதி செயலணிகள் நியமிக்கப்படாதது ஏன், என்றக் கேள்விக்கெல்லாம் பதிலே கிடைக்காது. “ஒரே நாடு- ஒரே சட்டம்”  என்றால் நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதை நாமும் வலியுறுத்துகின்றோம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .