2025 ஜூலை 12, சனிக்கிழமை

அதிர்ச்சிகளுடன் தொடங்கினார் பிரதமர் மே

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த டேவிட் கமரோன், இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பதவியிலிருந்து விலக, புதிய பிரதமராக தெரேசா மே பதவியேற்றுக் கொண்டார்.

ஒன்றியத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்ற பிரிவுக்கு, கமரோன் தலைமை தாங்கியிருந்த நிலையில், தனது பிரிவு தோல்வியடைந்த பின்னர், பதவியிலிருந்து விலகுவதே சிறப்பானது எனத் தெரிவித்திருந்தார். அதே பிரிவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பெரிதளவில் தன்னை வெளிப்படுத்தியிருக்காத அப்போதைய உள்விவகாரச் செயலாளரான மே, யாரும் எதிர்பாராத வண்ணமாக, பிரதமர் பதவியைப் பிடித்துள்ளார். அத்தோடு, இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட மார்கரெட் தட்சருக்குப் பின்பு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான இரண்டாவது பெண்மணி என்ற பெருமையும், தெரேசா மே-க்குக் கிடைத்தது.

தான் பதவியேற்ற முதல் நாளிலேயே, அதிர்ச்சிகரமான மாற்றங்களுடன், தெரேசா மே ஆரம்பித்தார். அவரது முதல்நாள் அமைச்சரவைப் பதவி அறிவிப்புகளில், வெளியேற வேண்டுமென்ற பிரிவின் முக்கியஸ்தர்களை உள்வாங்கினார். அதில், முக்கியமான அதிர்ச்சியாக, வெளியேற வேண்டுமென்ற பிரிவுக்குத் தலைமை தாங்கிய இருவரில் ஒருவரான இலண்டனின் முன்னாள் மேயர் பொரிஸ் ஜோன்ஸன், வெளிநாட்டுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இனவாதம், பிரிவினைவாதம், அரசியலுக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் என, சர்ச்சைகளை ஏற்படுத்திய பொரிஸ் ஜோன்ஸன், அமைச்சரவையின் முக்கியமான இந்தப் பதவிக்கு அமர்த்தப்பட்டமை, புருவங்களை உயர்த்திருந்தது.

கமரோனின் நெருங்கிய தோழரான ஜோர்ஜ் ஒஸ்போர்ண், கருவூலத் தலைவர் (நிதியமைச்சர்) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, முன்னாள் வெளிநாட்டுச் செயலாளராக இருந்த பிலிப் ஹமொன்ட் நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைக்கல் பலன், அப்பதவியிலேயே தொடர்ந்தும் நீடிப்பதோடு, மே-இன் முன்னாள் பதவியான உள்விவகாரச் செயலாளர் பதவிக்கு, அம்பெர் றுட் நியமிக்கப்பட்டார்.

புதிதாக உருவாக்கப்பட்ட "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான இராஜாங்கச் செயலாளர்", "சர்வதேச வர்த்தகத்துக்கான இராஜாங்கச் செயலாளர்" ஆகிய அமைச்சரவைப் பதவிகளுக்கு, வெளியேற வேண்டுமென்ற பிரிவைச் சேர்ந்தவர்களான டேவிட் டேவிஸ், லியம் பொக்ஸ் ஆகியோர் முறையே நியமிக்கப்பட்டனர்.

வெளியேற வேண்டுமென்ற பிரிவைச் சேர்ந்த ஒருவரே, புதிய பிரதமராக வர வேண்டுமென, அப்பிரிவைச் சேர்ந்தோர் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே, அப்பிரிவினரையும் திருப்திப்படுத்தும் விதத்தில், இந்த அமைச்சரவைப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .