2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

அப்பிளின் உதவியின்றி 'ஐபோனுக்குள் புக முடியும்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 22 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் சான் பெர்னான்டினோவில் தாக்குதலை மேற்கொண்டவரின் ஐபோன் அலைபேசிக்குள், அதை உருவாக்கிய அப்பிள் நிறுவனத்தின் உதவியின்றித் தங்களால் உட்புக முடியுமென எண்ணுவதாக, அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க அரசாங்கத்துக்கும் அப்பிள் நிறுவனத்துக்குமிடையில் பாரிய முரண்பாடு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியுமெனக் கருதப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே, இத்தகவலை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்படாத மூன்றாந்தரப்பொன்று, ஐபோன் ஒன்றுக்கு, அப்பிளின் உதவியின்றி எவ்வாறு உட்புகுவது என்பதை வெளிக்காட்டியுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'சான் பெர்னான்டினோவில் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் அலைபேசிக்குள் உட்புகுவதே, எமது உச்சக்கட்ட முன்னுரிமையாக எப்போதுமே இருந்துவந்துள்ளது. இந்த இலக்கை மனதில் இருத்தி, அப்பிளின் உதவியின்றி, அலைபேசிக்கான உட்புகுதலை எவ்வாறு பெறலாம் என்பதில், மத்திய புலனாய்வுத் திணைக்களம் ஈடுபட்டு வந்தது. நிறுவனத்துடனான ஒரு மாதம் நீடித்த முறுகலின் போதும் இது தொடர்ந்தது" என, நீதித் திணைக்களத்தின் பேச்சாளர் மெலானி நியூமன் தெரிவித்தார். தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முறை, ஐபோன் ஒன்றிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கு உதவுமென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, இது தொடர்பில், தாமத நிலைமையொன்றை ஏற்படுத்த விரும்புவதாக அரசாங்கம் கோரியிருந்த நிலையில், அதற்கு அனுமதியளித்த நீதிபதி, ஏப்ரல் 5ஆம் திகதிக்கு முன்னர், அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

குறித்த ஐபோனுக்குள் உட்புகுவதற்கு உதவுமாறு, அப்பிள் நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் கேட்டுக்கொண்ட போதிலும், ஓர் அலைபேசிக்குள் புகுவதற்கு உதவியளிக்கப்படுமாயின், அது எதிர்காலத்திலும் பழக்கமாகிவிடும் எனவும் பயனர்களின் தரவுகள் முக்கியமானவையெனவும் தெரிவித்து, அதற்கிணங்குவதற்கு அப்பிள் மறுப்புத் தெரிவித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X