2020 நவம்பர் 28, சனிக்கிழமை

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு: 'நான் நம்பவில்லை'

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பைத் தெரிவுசெய்வதற்காக, ரஷ்யாவைச் சேர்ந்த இணைய ஹக்கர்கள் செயற்பட்டனர் என்ற, ஐக்கிய அமெரிக்க புலனாய்வாளர்களின் கண்டுபிடிப்பை, அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பான செய்தி, ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், "நான் அதை நம்பவில்லை. அது, கேலிக்குரியது என நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்ததோடு, தங்களது தோல்விக்கு, ஜனநாயகக் கட்சியினர் காரணம் கண்டுபிடிக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

ரஷ்யாவின் தலையீடு சம்பந்தமான செய்திகள் வெளியாகியமையைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டவரும் தற்போதைய செனட்டருமான ஜோன் மக்கெய்ன், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு செனட்டரான லின்ட்சி கிரஹாம் ஆகியோர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் சிலருடன் இணைன்து, அறிக்கையொன்றை வெளியிட்டனர். அதில் அவர், நாட்டின் ஜனநாயகத்தின் மதிப்பைக் குறைப்பதற்காகச் செய்யப்படும் இணையவழி விடயங்கள் குறித்து, முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டனர்.

அத்தோடு, கட்சி எல்லைகளைத் தாண்டி, இவ்விடயத்தில் இணைந்து செயற்படப் போவதாகவும் தெரிவித்தனர்.
எனினும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனின் பிரசாரக் குழுத் தலைவரினதும் ஜனநாயகக் கட்சி தேசிய செயற்குழுத் தலைவரினதும் மின்னஞ்சல்கள் ஹக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டமை தொடர்பில், யார் பொறுப்பானவர்கள் எனத் தெரியவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டார். "அது ரஷ்யாவா, சீனாவா அல்லது படுக்கையொன்றை வேறு இடத்தில் காணப்படும் வேறு யாருமா என அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு அது குறித்துத் தெரியவில்லை" என்றார்.

ஜனாதிபதியாகத் தெரிவாகிய பின்னர், புலனாய்வுப் பிரிவினரோடு இடைவெளியொன்றைப் பேணிவரும் ட்ரம்ப், தனது பதவிக் காலத்தில், அவர்களை மாற்றவுள்ளதாகவும் சமிக்ஞையை வெளிப்படுத்தினார். "நாங்கள், வேறு நபர்களைக் கொண்டிருக்கப் போகிறோம். நாங்கள், எங்களுடைய ஆட்களைக் கொண்டிருப்போம். அவர்கள், அவர்களுடைய ஆட்களைக் கொண்டிருப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியாகத் தெரிவாகிய பின்னர், புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்படும் இரகசிய புலனாய்வுத் தகவல்களுக்கான அமர்வுகளில் பங்குபற்றுவதையும், ட்ரம்ப் தவிர்த்து வருகிறார். அது குறித்துக் கேட்கப்பட்ட போது, "எனக்குத் தேவையான நேரத்தில் அவற்றை நான் பெற்றுக் கொள்வேன். நான் மிகவும் புத்திசாலித்தனமான ஒருவர். அடுத்த 8 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு நாளும், ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியதில்லை" என்று குறிப்பிட்டார்.

ட்ரம்ப்பின் இராஜாங்கச் செயலாளராக, இதுவரை யாரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் றெக்ஸ் டிலெர்ஸன், அந்தப் பதவிக்குத் தெரிவாகின்றமை ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது என, உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, புட்டின் மீது அதிக புகழ்ச்சியை வெளிப்படுத்திய ட்ரம்ப், புட்டினுடன் மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் டிலெர்ஸனை நியமிக்கின்றமை குறித்தும், ஜோன் மக்கெய்ன் உள்ளிட்டவர்கள், தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, தாய்வான் ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை, டொனால்ட் ட்ரம்ப் ஏற்றமையைத் தொடர்ந்து சிக்கலுக்கு உள்ளாகியிருந்த சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு, மேலும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
தொலைக்காட்சி ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், தாய்வானும் சீனாவின் ஒரு பகுதி என்பதை வலியுறுத்தும் "ஒரே சீனா" என்ற கொள்கைக்கு, அமெரிக்கா கட்டுப்படாது அன்று எனத் தெரிவித்தமையைத் தொடர்ந்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆழமாகக் கவனம் செலுத்தி வருவதாக, சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--