Shanmugan Murugavel / 2016 மார்ச் 22 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமொன்றை மேற்கொண்டு கியூபாவுக்குச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கியூப ஜனாதிபதி றாவுல் காஸ்ட்ரோவும், இரு நாடுகளின் கொள்கைகள் தொடர்பாகவும் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாகவே வெளியிட்டனர்.
இருவரும் இணைந்து மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கியூபாவின் மனித உரிமைகளை முன்னேற்றுமாறு, ஜனாதிபதி ஒபாமா கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி காஸ்ட்ரோ, கோபத்தை வெளிப்படுததியதோடு, அமெரிக்காவின் இரட்டை நியமங்கள் குறித்துக் கேள்வியெழுப்பினார்.
இதன்போது, இரு தரப்புக்குமிடையிலான வேறுபாடுகளை வெளிப்படையாகவே வெளிப்படுத்தியமைக்காக, காஸ்ட்ரோவைப் பாராட்டிய ஒபாமா, எனினும், மனித உரிமைகள் விடயத்தில் கியூபா முன்னேறினால் மாத்திரமே, முழுமையான உறவொன்று கட்டியெழுப்பப்படுமெனத் தெரிவித்தார். மனித உரிமைகளின் முன்னேற்றமின்றி, அது, மிகவும் பலமிக்க எரிச்சல்தரும் ஒன்றாகத் தொடர்ந்தும் காணப்படுமென அவர் குறிப்பிட்டார்.
'ஜனநாயகத்தில் அமெரிக்கா நம்புகிறது. பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், சமயத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் ஆகியவை, அமெரிக்க விழுமியங்கள் மாத்திரமன்றி, பிரபஞ்ச விழுமியங்கள் என அமெரிக்கா நம்புகிறது" என ஜனாதிபதி ஒபாமா, மேலும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி காஸ்ட்ரோ, எல்லா நாடுகளும் சர்வதேச உரிமைகள் எல்லாவற்றையும் மதிப்பதில்i எனக் குறிப்பிட்டார். எனினும், ஊடகவியலாளர்களிடமிருந்து கேள்விகளை ஏற்றுக்கொள்ளும் போது தடுமாற்றத்தை எதிர்கொண்டார். 2008ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற காஸ்ட்ரோ, இதற்கு முன்னர், நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஊடகச் சந்திப்புகளில் கேள்விகளை எதிர்கொண்டதில்லை என்பதோடு, அமெரிக்க இராஜதந்திரிகளின் தொடர்ச்சியான பேரம்பேசலைத் தொடர்ந்து, ஒரு கேள்வியை மாத்திரம் எதிர்கொள்வதற்குச் சம்மதித்திருந்தார்.
அதன்போது, அரசியல் கைதிகள் தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டபோது கோபமடைந்த காஸ்ட்ரோ, 'இப்போது என்னிடம் சொல்லுங்கள், என்ன அரசியல் கைதிகள்? பெயரொன்றை அல்லது பெயர்களைத் தாருங்கள். அவ்வாறு அரசியல் கைதிகள் இருப்பரெனில், இன்று இரவுக்கும் அவர்கள் விடுதலை செய்யப்படுவர்" என்றார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் கைதிகளென பட்டியற்படுத்தப்படுவோர், குற்றவியல் குற்றவாளிகள் எனத் தெரிவித்தார்.
மனித உரிமைகள் தொடர்பாகக் கேள்வியொன்று எழுப்பப்பட்டபோது, ஒரு கேள்வியை எதிர்கொள்ள மாத்திரமே சம்மதம் தெரிவித்தாக, கோபத்துடன் தெரிவித்தார். இதன்போது, இன்னொரு வினாவை ஏற்றுக்கொள்ளுமாறு, ஜனாதிபதி ஒபாமா, விளையாட்டாகச் சம்மதிக்க முனைய, மிகுந்த தயக்கத்துடன் அவர் சம்மதித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு முடிவடையும் போது, ஜனாதிபதி ஒபாமாவின் கையை உயர்த்துவதற்கு ஜனாதிபதி காஸ்ட்ரோ முயன்ற போதிலும், அதற்கு ஒபாமா ஒத்துழைப்பு வழங்காமையால், நகைப்புக்கிடமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
23 minute ago
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
04 Jan 2026