2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா முழுவதும் எதிர்க் கட்சிகள் போராட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்தியாவில் நாடு முழுவதும் எதிர்க் கட்சிகள் இன்று போராட்டங்களை நடத்தின.

பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு, ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அக்கோரிக்கையை ஏற்க மத்திய அரசாங்கம் மறுத்து விட்டது.

இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லொறி போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிறு-குறு தொழில்கள், விவசாயம், மீன்பிடி உட்பட பல தொழில்களில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

இந்நிலையிலையிலேயே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், அதைக் கட்டுப்படுத்தக் கோரியும் நாடு தழுவிய இன்றைய பொது வேலை நிறுத்தம், முழு கடை அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த. காங்கிரஸுக்கு நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு மாநில காங்கிரஸ்,   விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

கட்சிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமான வணிக, தொழில் அமைப்புகளும் வணிக சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. தொழிற்சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கின.

வட மாநிலங்களில் சமாஜ் வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்பட பல கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தன.

எதிர்க்கட்சிகள் அறிவித்தப்படி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நேற்று நடந்தது. ஆனால், தமிழ் நாட்டில் முழு அடைப்புப் போராட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரயில், ஓட்டோ, தனியார் வாகனங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கியதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

ஆனால், வட இந்தியாவில் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பு முழுமையாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு ஊர்வலம் மறியலில் ஈடுபட்டனர்.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.

மும்பையில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. ஆனால், ஓட்டோ, வாடைகைக் கார்கள் வழக்கம் போல ஓடின. சில இடங்களில் வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அரச பஸ்கள் ஓடவில்லை. வாடகைக் கார்கள், ஓட்டோக்களும் இயக்கப்படவில்லை.

கர்நாடகத்தில் இன்று பெங்களூர், மங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் 23,000 அரச பஸ்கள் ஓடவில்லை. 

பெங்களூரு அரசு பஸ்கள் இயங்கவில்லை. மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள் ஓட வில்லை. டாக்சிகள், ஆட்டோக்கள் முழுமையாக ஓடவில்லை. தனியார் டாக்சி நிறுவனங்களும் இன்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் வாடகை கார்களும் இயங்கவில்லை. வங்கி ஊழியர்கள் வேலைக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கர்நாடகம் முழுவதும் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒரு சில பெட்ரோல் பங்க்குகளை தவிர பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் செயல்படவில்லை.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. அரசு, தனியார் பஸ்கள், வாகனங்கள் வழக்கம் போல ஓடின. இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--