2021 மே 12, புதன்கிழமை

இலண்டன் தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ்

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில், நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோருவதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் முகவரகமான அமக், நேற்று  (04) தெரிவித்துள்ளது.குறித்த தாக்குதலில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், 48 பேர் காயமடைந்திருந்தனர்.   

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகளின் பிரிவொன்று, இலண்டன் தாக்குதலை நடத்தியதாக, அமக்கின் ஊடகப் பக்கத்தில் பதியப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அகற்றுவதில், ஐக்கிய இராச்சியம் கடுமையாக இருக்க வேண்டுமென, ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளதுடன், திட்டமிட்டபடி, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத் தேர்தல், எதிர்வரும் வியாழக்கிழமை (08) இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.   

இதேவேளை, கொல்லப்பட்டவர்களில், பிரெஞ்சுப் பிரஜையொருவரும், கனேடியப் பிரஜையொருவரும் உள்ளடங்குவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது பிரஜையொருவர் காயமடைந்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.   

இந்நிலையில், தற்கொலை அங்கிகளை அணிந்து, தற்கொலைக் குண்டுதாரிகள் போன்று தோன்றிய தாக்குதலாளிகளை நிறுத்துவதற்க்கு, எட்டு அதிகாரிகள், 50 சன்னங்களைத் தீர்த்ததாக, ஐக்கிய இராச்சியத்தின் சிறப்பு நடவடிக்கைகளுக்கான உதவி ஆணையாளர் மார்க் றொவ்லி தெரிவித்துள்ளார். பொதுமகனொருவரும், ஆபத்தில்லாத துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு உள்ளாகியிருந்தார்.   

இதேவேளை, தாக்குதலாளிகள் மூவரில், குறைந்தது ஒருவராவது, பாகிஸ்தானியர் என, மேற்குலக பாதுகாப்புச் சேவையின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .