2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

உடலைப் பிரிந்தாலும் இறந்ததாக அர்த்தமில்லை: தாக்குதலாளி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 18 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டன் றூஸில், பொலிஸாருக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்ட நபரான கவின் லோங் பற்றிய தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

கொஸ்மோ சிடெபென்ரா என்ற பெயரில் இணையத்தளங்களில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட குறித்த நபர், ஆண்களில் சிறந்த ஆணாக இருப்பது என்பது தொடர்பான அறிவுரைகளை வழங்கி வந்தார். அத்தோடு, கறுப்பின உரிமைகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்துவந்த அவர், அண்மைய சில நாட்களாக, மிகவும் தீவிரமான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

தாக்குதல் மேற்கொண்ட அன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த அவர், "ஒவ்வொரு நாள் காலையிலும் நீங்கள் நித்திரையால் எழுவதால் மாத்திரம், நீங்கள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தமன்று. அத்தோடு, உங்களது பௌதிக உடலை நீங்கள் பிரிந்தாலும், நீங்கள் இறந்ததாக அர்த்தமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னைய சில டுவீட்களில், "உங்களை அவமரியாதைக்குட்படுத்துவதில், ஒருவர் மிகவும் இசைவாக இருக்க விடாதீர்கள்", "வெள்ளையின மனிதர்களில் இனவாதம் இருக்கின்றதென நம்புவோரை விட, பேய்கள் இருக்கின்றதென நம்புவோர் அதிகம்", "வன்முறை தான் முடிவன்று (வன்முறையும் முடிவு தான்), ஆனால் உங்களுடைய மக்கள் சுதேச அமெரிக்கர்கள் போல் இல்லாமல் போகும்நிலை வரவிடாமல், எத்தருணத்தில் எழுந்து நிற்பீர்கள்?" என்று, அமெரிக்காவில் காணப்படும் இனவாதம் பற்றிய கருத்துகள் காணப்படுகின்றன.

அதற்கு முன்னர், யூடியூப் இணையத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட அவர், தன்னோடு எந்த அமைப்பையும் தொடர்புபடுத்த வேண்டாமெனத் தெரிவித்தார். கறுப்பின வணிகப் பாடசாலைக்குச் சென்றதாகவும் தான் கிறிஸ்தவரெனவும் இஸ்லாமின் தேசம் அமைப்பிலும் இருந்ததாகவும் ஆபிரிக்காவுக்குச் சென்றதாகவும் தெரிவித்த அவர், தன்னோடு யாரையும் தொடர்புபடுத்த வேண்டாமெனத் தெரிவித்ததோடு, நீதிக்கான உணர்வோடு மாத்திரமே தான் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .