2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஐ.நாவால் ஆதரவளிக்கப்பட்ட லிபிய அரசாங்கத்துக்கு ஆயுதமளிக்க அமெரிக்கா ஆதரவு

Shanmugan Murugavel   / 2016 மே 17 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களுக்கெதிராக ஐக்கிய நாடுகளால் ஆதரவளிக்கப்பட்ட லிபியாவின் ஒன்றிணைந்த அரசாங்கம் சண்டையிட உதவுவதற்காக ஆயுதங்களை அளிக்க தயாராக இருப்பதாக ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய உலக வல்லரசு நாடுகளும் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகளின் ஆயுதத் தடையிலிருந்து விலக்கு பெற எதிர்பார்க்கும் லிபியாவுக்கு உலக வல்லரசு நாடுகள் ஆதரவளிக்கும் என ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி வியன்னாவில் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ், லிபியாவுக்கு புதிய ஆபத்து என மேலும் தெரிவித்த கெரி, இது நிறுத்தப்படவேண்டும் என்பது தவிர்க்கப்பட முடியாதது எனத் தெரிவித்தார். ஆயுதத் தடை விரைவாக விலக்கப்படாது விட்டால், லிபியாவின் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றி விடும் என லிபிய அரசாங்கம் கடந்த மாதம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள லிபிய ஒன்றிணைந்த அரசாங்கத்தின் பிரதமர் பயேஸ் சர்ராஜ், தாங்கள் சர்வதேச சமூகத்தை உதவியளிக்குமாறே கோருவதாகவும் தாங்கள் சர்வதேச தலையீட்டைப் பற்றி கதைக்கவில்லையென்றும் பயிற்சியில், துருப்புக்களுக்கு ஆயுதமளிப்பதில், இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கான சர்வதேச உதவியையே தாங்கள் கதைப்பதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் லிபியாவுக்காக கோரப்பட்டுள்ள ஆயுதத்தடை விலக்கானது அமுலுக்கு வர முதல் ஐக்கிய நாடுகளின் தடை விதிக்கும் செயற்குழுவினால் அனுமதிக்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  எனினும் லிபிய அரசாங்கத்தின் முறையான கோரிக்கையானது, ஆயுதத் தடைக்கான விலக்கு விரைவில் அனுமதிக்கப்படும் என்ற சமிக்ஞையே வழங்குகின்றது.

யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்று பல நிர்வாகங்கள் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், தமது ஆதரவை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மேற்கு லிபியாவிலுள்ள ஆயுதக் குழுக்கள் அரசாங்கத்தை அவ்வளவாக ஆதரிக்கவில்லை என்பதோடு அங்கு யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் எனத் தெளிவில்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. லிபியாவில் நீண்ட காலமாக ஆட்சியிலிருந்த கேணல் மும்மர் கடாபி, கடந்த 2011ஆம் ஆண்டு, நேட்டோவினால் ஆதரவளிக்கப்பட்ட படைகளினால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதோடு லிபியா கொந்தளிப்பு நிலைமைக்குள் உள்ளாகியிருந்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .