2025 ஜூலை 09, புதன்கிழமை

கடமைக்குத் திரும்பினார் அங்கெலா மேர்க்கெல்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 28 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தனது விடுமுறையை இடைநிறுத்திவிட்டு, தனது கடமைக்காக மீளத் திரும்பியுள்ளார். ஜேர்மனியில் அதிகரித்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு திரும்பியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சம்பந்தமான கூட்டமொன்றைத் தலைமை தாங்கிய மேர்க்கெல், அதன் பின்னதாக விடுமுறையில் காணப்பட்டார். அதுவரை, உள்விவகார அமைச்சரான தோமஸ் டி மெய்ஸியாரேயே, நாட்டின் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

பிரான்ஸில் தேவாலயமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் இரண்டு பாதிரியார்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பொஸ்வா ஒலாண்டோ சென்றிருந்த நிலையில், ஜேர்மனியில் தாக்குதல் இடம்பெற்ற போது மாத்திரம், அங்கெலா மேர்க்கெல் அங்கு இல்லாமை, அவரது தலைமைத்துவம் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தது.

அகதிகள் தொடர்பாக தாராளக் கொள்கைகளைப் பின்பற்றிவரும் அங்கெலா மேர்க்கெல்லினாலேயே, இஸ்லாமிய ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அவரது விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலைமையிலேயே, தனது கடமைக்கு அவர் திரும்பியுள்ளார்.

இடதுசாரிகள், வலதுசாரிகள் என அனைத்துத் தரப்பினராலும் வழங்கப்படும் இந்த அழுத்தங்களை அவர் எவ்வாறு எதிர்கொள்ளுவார் என்பதிலேயே, ஜேர்மனியை நோக்கிச் செல்லும் அகதிகளினதும் அங்கெலா மேர்க்கெல்லினதும் எதிர்காலம் தங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .