2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

காங்கிரஸிடம் உதவிக்காக மன்றாடுகிறார் ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 02 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் இடம்பெற்ற படை நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்ட அமெரிக்க முஸ்லிம் படைவீரர் ஒருவரின் தந்தை, ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் வைத்து டொனால்ட் ட்ரம்ப் மீது முன்வைத்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் பிரசாரக் குழு, அமெரிக்க காங்கிரஸிடம் உதவி கோரியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள சிறுபான்மையினர் மீது கடும்போக்கான கருத்துகளை வெளிப்படுத்திவரும் ட்ரம்ப், இஸ்லாமிய ஆயுததாரிகளால் நிலவும் ஆபத்தைத் தடுப்பதற்கு, முஸ்லிம்களை நாட்டுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்போவதாகத் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், தேசிய மாநாட்டில் வைத்துக் கருத்துத் தெரிவித்த படைவீரனின் தந்தையான கிஸர் கான், ட்ரம்ப்பின் கொள்கைகள் குறித்து விமர்சனங்களை வெளிப்படுத்தியதோடு, நாட்டுக்காக ட்ரம்ப் எதனையும் தியாகம் செய்ததில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், கிஸர் கான் மீது விமர்சனங்களை முன்வைத்ததோடு, அவர் உரையாற்றும் போது, அவரது மனைவி அவரருகில் கதைக்காமல் இருந்ததாகவும் அவரது மத நம்பிக்கை காரணமாக, கதைப்பதற்கு அவருக்கு அனுமதி இல்லாமல் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்திருந்தார். இந்நிலையில், இந்த விமர்சனங்கள் குறித்து அஞ்சிய ட்ரம்ப்பின் பிரசாரக்குழு, அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையிலும் செனட் சபையிலுள்ள குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களின் (இரண்டு சபைகளிலும் குடியரசுக் கட்சியே பெரும்பான்மைக் கட்சியாகும்) ஆதரவைக் கோரியுள்ளது. இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட எதிர்பார்ப்பதாகவும், அதற்கு காங்கிரஸின் உதவி அவசியமானது எனவும், ட்ரம்ப்பின் பிரசாரக்குழுவிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தெரிவித்துள்ளது.

எனினும், இதனால் நன்மைகள் எவையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் மிற்ச் மக்கனல், ட்ரம்ப்பின் இந்தச் செயற்பாடுகளுக்கெதிராக வெளிப்படுத்திய எதிர்ப்பை, செனட் உறுப்பினர்கள் எதிரொலிப்பதாகத் தெரிகிறது. அத்தோடு, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான போல் றயனும், ட்ரம்ப்பின் கருத்துகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

குடியரசுக் கட்சியின் செனட்டரும் போரின் போது வியட்னாமில் சிறைபிடிக்கப்பட்டவரும் காங்கிரஸிலுள்ள சிரேஷ்ட போர் வீரராக உள்ளவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் மக்கெய்னும், ட்ரம்ப்புக்கான எதிர்ப்பில் இணைந்துள்ளார். போரின் போது சிறைபிடிக்கப்பட்டவர் என்பதால், ஜோன் மக்கெய்ன் ஒரு போர் வீரர் அல்லர் என, சில காலங்களுக்கு முன்னர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மக்கெய்னும் ட்ரம்ப்பின் கருத்துகளுக்குக் கண்டனத்தை வெளியிட்டிருப்பது, அவருக்குப் பாதிப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X