Shanmugan Murugavel / 2016 ஜூலை 13 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள டலஸ் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஐந்து பொலிஸார் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவர்களது நினைவு நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்துகொண்டார்.
தனது உரையில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ஒபாமா, பொதுவான சவால்கள் குறித்தும் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
"எனது ஜனாதிபதிக் காலத்தில், அளவுக்கதிகமான நினைவு நிகழ்வுகளில் நான் உரையாற்றியுள்ளேன். நிலைத்திருக்கக்கூடிய மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு, சொற்கள் எவ்வாறு போதாமலுள்ளன என்பதை நான் பார்த்துள்ளேன். என்னுடைய சொற்கள் எவ்வாறு போதாமலுள்ளன என்பதை நான் பார்த்திருக்கிறேன்" என்றார்.
கறுப்பின இளைஞர்கள் இருவர், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலேயே பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இனவாதத்துக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் கறுப்பினத்தவர்கள், பொலிஸ் பணி எவ்வளவுக்குக் கடினமானது என்பதை உணர வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், "போதைப் பொருள் சிகிச்சைகளுக்கும் உளநல நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் நிதியளிக்க நாம் மறுக்கிறோம். சமூகங்களை நாம் அளவுக்கதிகமான துப்பாக்கிகளால் நிரப்புகிறோம். பதின்ம வயதுடைய ஒருவர் கணினியிலோ அல்லது புத்தகத்திலோ கை வைப்பதை விட, துப்பாக்கியொன்றை வாங்குவது இலகுவான நிலை காணப்படுகிறது" என்றார்.
இந்த நினைவு நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷூம் கலந்துகொண்டதோடு, "சமூகக் குழுக்களை நாம் அடிக்கடி, மோசமான உதாரணங்களை வைத்தே மதிப்பிடுகிறோம்" என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .