2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

மாயமான சின்ன திரை நடிகை பிடிபட்டார்

Editorial   / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரில் பைக்கில் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காரை இயக்கிய சின்ன திரை நடிகை சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளில் பிடிபட்டார்.

கன்னட சின்ன திரை நடிகையான திவ்யா சுரேஷ் ராவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர். இந்த நிலையில், பெங்களூரு மாநகரின் பயாதரயணாபுரத்தில் கடந்த அக். 4-இல் நிகழ்ந்தவொரு கார் விபத்தில் இவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.

சம்பவ நாளன்று கிரண் என்பவர் தமது உறவுக்கார பெண்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வண்டியின் பின்னால் ஒரு கார் மோதியதாக புகார் அளித்துள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் அந்த கார் மின்னல் வேகத்தில் மாயமானதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எவருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்த பெங்களூரு பொலிஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் திவ்யா சுரேஷ் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததை பொலிஸார் உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவ நாளன்று ஹைதராபாத்துக்குச் செல்லும் விமானத்தை பிடிப்பதற்காகவே அவசர அவசரமாக காரை ஓட்டிச் சென்றதாகவும் அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணை தொடரும் நிலையில், இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா சுரேஷ் வெளியிட்டுள்ள காணொலியில், மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “சட்டத்தை விஞ்சிய மனிதர்கள் யாருமில்லை. தவறு செய்தவர்கள் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X