2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சமாதான ஒப்பந்தத்தை ஏற்றது யேமன்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 31 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு வருடத்துக்கும் மேலாக யேமனில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஐக்கிய நாடுகளால் முன்மொழியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுள்ளதாக, யேமனிய அரசாங்கம் இன்று அறிவித்தது. எனினும், இது தொடர்பாக எதிரணிப் போராளிகள் தரப்பிடமிருந்து எந்தவிதத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

யேமன் ஜனாதிபதி அபெரபோ மன்சூர் ஹடி தலைமையில், குவைத்தின் தலைநகரான குவைத் நகரில் இடம்பெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே, யேமன் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"ஆயுத முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரவும் சனாவிலிருந்தும் தேஸ், அல்-ஹூடாய்டாவிலிருந்தும் போராளிகளை வெளியேறவும் கோரும், ஐக்கிய நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை, இந்தச் சந்திப்பு ஏற்றுக் கொண்டது" என, இச்சந்திப்பு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.

"குவைத் ஒப்பந்தத்துக்கு" அரசாங்கம் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை, ஐ.நா விசேட தூதுவருக்கு அறிவித்துள்ளதாக, அரசாங்கத்தின் பேரம்பேசல் அணிக்குத் தலைமை தாங்கும் யேமனின் வெளிநாட்டு அமைச்சர் அப்துல்மலெக் அல்-மிக்லாபி தெரிவித்தார்.

எனினும், அரசாங்கத் தரப்பில், முன்நிபந்தனையொன்றும் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஹூதி போராளிகள், முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலேக்கு ஆதரவாகச் செயற்படும் படைகள் ஆகியோர், ஓகஸ்ட் 7ஆம் திகதிக்கு முன்னதாக, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .