2025 ஜூலை 12, சனிக்கிழமை

துருக்கி இராணுவப் புரட்சி: 'திட்டமிடப்பட்ட நாடகமாக இருக்கலாம்'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 17 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சிக்குப் பின்னால் இருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதபோதகரும் எழுத்தாளருமான பெத்ஹூல்லா குலன், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதோடு, இது திட்டமிடப்பட்ட நாடகமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு வரை, அப்போதைய பிரதமராக இருந்த, தற்போதைய ஜனாதிபதி ஏர்டோவானின் நெருங்கிய அரசியல் தலைமையாக இருந்த குலன், அவ்வாண்டு முன்னெடுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளின் பின்னால் இருந்தாரென ஏர்டோவானினால் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அந்த உறவை முறித்துக் கொண்டார்.

துருக்கியின் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள குலன், தற்போது அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் வசித்து வருகிறார். இந்தப் புரட்சிக்குப் பின்னால் அவர் இருக்கிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குலன், துருக்கிக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டுமெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, "அமெரிக்காவே, இந்த நபரை (நீ) நாடுகடத்த வேண்டும்" என்று தெரிவித்தார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குலன், இந்த இராணுவப் புரட்சிக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு, இது திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

"சிறிய வாய்ப்பொன்று உள்ளது. இது, திட்டமிடப்பட்ட புரட்சியாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது" என்றார். எனினும், இராணுவ நடவடிக்கையூடாக ஜனநாயகத்தை அடைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ஏர்டோவனின் அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், "அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத எந்தவொரு இயக்கத்துக்கும் எந்தவொரு குழுவுக்கும் எந்தவோர் அமைப்புக்கும், அவர்களிடம் சகிப்புத்தன்மை இல்லை போன்று காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .