2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

துருக்கியில் 47 ஊடகவியலாளர்களுக்குப் பிடியாணை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 27 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முயற்சியைத் தொடர்ந்து, அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, 47 ஊடகவியலாளர்களைத் தடுத்து வைப்பதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் அறிவிக்கப்படுகின்றன.

ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகக் கொண்டவரும் இந்த இராணுவப் புரட்சிக்குப் பின்னாலிருந்தார் எனவும் துருக்கியால் குற்றஞ்சாட்டப்படும் பெதுல்லா குலன் தொடர்பான விசாரணைகளின் ஓர் அங்கமாக, இந்த ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், குலனோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் ஸமன் என்ற பத்திரிகையில் பணியாற்றியதோடு, இந்தப் பத்திரிகை, புரட்சிக்கு முன்பாகவே - மார்ச் மாதத்திலேயே - அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த ஊடகவியலாளர்களில் ஒருவரின் வீட்டில், இன்று காலை புகுந்த பொலிஸார், இரண்டரை மணிநேரமாக அங்கு தேடுதல் நடத்திய பின்னர், அவரைத் தடுத்து வைத்தனர்.

கடந்த 15ஆம் 16ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புரட்சி முயற்சி, 246 பேரின் உயிரைப் பறித்து, நிறைவுக்கு வந்தது. ஆனால், அந்த முயற்சியைத் தொடர்ந்து, இராணுவத்தினர், பொலிஸார், நீதிபதிகள், ஆசிரியர்கள், சிவில் பணியாளர்கள் உட்பட 60,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .