2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

தேர்தலுக்குத் தயாராகிறது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 21 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஆதரவை இழந்துவரும் பிரதமர் மல்கொம் டேர்ண்புல், தனது பதவிக்காலத்தின் முக்கியமான முடிவொன்றை அறிவித்துள்ளார். இதன்படி, ஜூலை 2ஆம் திகதி, தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன.

தற்போது ஓய்வு வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்றம், எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. அதன்போது, ஆளுங்கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தம் தொடர்பான சட்டமூலத்துக்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. ஆனால் அச்சட்டமூலம், மேல்சபையில் வைத்து, கிறீன்ஸ், தொழிலாளர் கட்சி போன்றவற்றால் எதிர்க்கப்பட்டுத் தோற்கடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு, நாட்டின் தேசிய வரவு செலவுத் திட்டம் வெளியிடப்படுதல், ஒரு வாரத்தால் முன்னகர்த்தப்பட்டு, மே 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது என, டேர்ண்புல் தெரிவித்தார்.

'விளையாடுவதற்கான காலம் நிறைவடைந்துள்ளது. வெறும் முட்டுக்கட்டடையாக இருப்பதை விட, தனது பணியை நிறைவேற்றுவதற்கு, செனட்டுக்கு இதுவொரு வாய்ப்பாகும். முக்கியமான இந்தச் சட்டமூலத்தில், தொழிலாளர், கிறீன் கட்சிகளால் மேற்கொள்ளப்படும் தடைகளும் மெதுவாகச் செல்தலும் முடிவுக்கு வர வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தேர்தல், அடுத்தாண்டு ஜனவரியிலேயே இடம்பெறவுள்ள போதிலும், தற்போது இச்சட்டமூலங்கள் நிறைவேற்றப்படாவிடின், ஜூலை 2ஆம் திகதி, தேர்தலை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நவம்பரில், அப்போதைய பிரதமரான டொனி அபொட்டின் கட்சித் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றிய டேர்ண்புல், புதிய பிரதமராகப் பதவியேற்றிருந்தார். பதவியேற்றது முதல், அதிக வரவேற்புடன் காணப்பட்ட அவருக்கான ஆதரவு, அண்மைக்காலமாகக் குறைவடைந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது. எனவே, புதிய தேர்தலொன்றை எதிர்கொள்ளும் பிரதமரின் அறிவிப்பு, சவால்மிக்கதானதாகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .